பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

321


செய்தது தீபம். கி. வா. ஜகந்நாதன், லா. ச. ராமாமிர்தம், நாரண துரைக்கண்ணன், ந. சிதம்பரசுப்ரமண்யன், மணிக்கொடி சீனிவாசன், டி. எஸ். சொக்கலிங்கம், வெ. சாமிநாத சர்மா, தி. ஜ. ரங்கநாதன், பி. எஸ். ராமையா, நா. வானமாமலை, தூரன், தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், க. நா. சுப்ரமண்யம், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, ஜெயகாந்தன், அ. சீனிவாசராகவன், ரகுநாதன், கி. சந்திரசேகரன், மௌனி, திருலோக சீதாராம் ஆகியோரின் பேட்டிகள் இப்பகுதியில் வெளிவந்துள்ளன.

தமிழ் எழுத்தாளர்கள் தவிர, எனைய இந்திய மொழி எழுத்தாளர்களின் சந்திப்புகளையும் தீபம் பிரசுரித்திருக்கிறது. இதன் மூலம் இதர மாநில இலக்கியப் படைப்பாளிகள் பற்றியும், பிறமொழி இலக்கியங்கள் குறித்தும் தமிழ் வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது.

பேட்டிகள் மூலம் படைப்பாளிகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு வசதி செய்த தீபம், நானும் என் எழுத்தும் என்ற தலைப்பில் பல எழுத்தாளர்கள் தங்கள் அபிப்பிராயங்களையும் அனுபவங்களையும் வெளியிடுவதற்கு அரங்கம் அமைத்துக் கொடுத்தது. சுந்தர ராமசாமி, நகுலன், கி. ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், ஹெப்சியா ஜேசுதாசன் முதலியவர்களின் சுவாரஸ்யமான கட்டுரைகள் இப்பகுதியில் பிரசுரம் பெற்றிருக்கின்றன.

இவை போக, பிற மாநில இலக்கிய கர்த்தாக்களின் வாழ்க்கை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு உதவக்கூடிய கட்டுரைகளையும் தீபம் பிரசுரித்துள்ளது. சரத்சந்திரர் வாழ்க்கை, பங்கிம் சந்திரர், கேசவ தேவ் ஆகியோரின் அறிமுகம், எம். டி. வாசுதேவன் நாயர் எழுதிய இராஜலட்சுமி என்ற கதாசிரியை முதலியவை குறிப்பிடத்தகுந்தவை.

மலையாள எழுத்தாளர்கள் பற்றி விரிவாகவும் புதிய முறையிலும் எழுதப்பட்ட கட்டுரைகள் முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது விசேஷமானது. இனிய முறையில் குறிஞ்சி வேலன் தமிழாக்கித் தந்த இக்கட்டுரைகள் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்து மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றுள்ளன.

இளைய தலைமுறையினருக்கு—முக்கியமாக இலக்கிய ஆய்வாளர்களுக்கு— அதிகம் பயன்படக்கூடிய கட்டுரைத் தொடர்களை ‘தீபம்’ விடாது வெளியிட்டு வருகிறது. பி. எஸ். ராமையாவின் ‘மணிக்கொடி காலம்‘, வல்லிக்கண்ணன் எழுதிய ‘சரஸ்வதி காலம்‘, ‘புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’, ‘பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை‘, தமிழில் சிறு பத்திரிகைகள் ஆகியவை முக்கியமானவை. சி. சு. செல்லப்பாவின் எழுத்து அனுபவங்கள் தனியாகக் குறிப்பிடத்தகுந்தது.

ஒரு நல்ல இலக்கியப் பத்திரிகை செய்ய வேண்டிய அவசியப் பணிகளை ‘தீபம்‘ ஆரம்பம் முதலே செய்து வருகிறது. இலக்கியத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றிய ஆய்வுகளை உற்சாகத்துடன் அது பிரசுரிக்கிறது. அகிலன் எழுதிய ‘கதைக் கலை‘, கு. அழகிரிசாமியின் ‘கதாநாயகர்கள்—ஓர் இலக்கியச் சிந்தனை‘, எழில் முதல்வன் எழுதிய ‘விடுதலைக்-