பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

347


வது இதழ் ‘ஆண்டு மலர்‘ ஆகப் பிரசுரம் பெற்றது; 1989 நவம்பர்—டிசம்பர் இதழ் அது. 1990—ல் மூன்று இதழ்களை வெளியிட்டது, ‘முன்றில்‘ சிறுகதை, கவிதைப் படைப்பிலக்கியத்தக்கு ‘முன்றில்‘ நன்கு பணியாற்றியுள்ளது.

1987-ல் பிறந்து , நல்ல முறையில் வளர்ந்து, இப்போதும் வந்து கொண்டிருக்கிற இலக்கியச் சிற்றேடு, ‘கனவு‘. சுப்ரபாரதி மணியன், செகந்திராபாத்திலிருந்து, இந்தக் காலாண்டிதழை நடத்தினார். ஒவ்வொர் ஆண்டின் முடிவிலும், பாராட்டப்பட வேண்டிய தன்மையில், ‘கனவு‘ ஆண்டுமலர் தயாரித்து வெளியிட்டது. சிறுகதை மலர், மலையாளக் கவிதைகள் சிறப்பிதழ், கட்டுரைச் சிறப்பிதழ் என்றெல்லாம் ‘கனவு’ இதழ்கள் மலர்ச்சிபெற்றன. (பின்னர், ‘கனவு‘, திருப்பூருக்கு மாற்றப் பெற்றது; அதன் போக்கிலும் மாறுதல்கள் ஏற்பட்டன. இவை 1990களில் நிகழ்ந்தவையாகும்.)

சிரத்தையோடு சிறப்பு இதழாகத் தனது ஒவ்வொர் இதழையும் உருவாக்குவதில் கவனிப்புப் பெற்றது, கோணங்கி என்ற படைப்பாளியை ஆசிரியராகக் கொண்டுள்ள, ‘கல்குதிரை‘. கோணங்கி, திறமையுள்ள படைப்பாளி, புதுமைகள் செய்வதில் ஆர்வம் உடையவர். அவரது ‘கல் குதிரை‘ தனித்தன்மை கொண்ட பத்திரிகையாக வளர்ந்துள்ளது.

சிறப்பிதழ்கள் தயாரிப்பதில் கோணங்கி ஓர் ஒழுங்கு முறையைக் கையாளவில்லை. இந்தி எழுத்தாளர் அக்ஞேயா பற்றி ஒரு சிறப்பிதழ் வெளியிட்டார். அடுத்து, அரவிந்தரின் சாவித்திரி காவியம் பற்றியும், தமிழ்நாட்டுச் சித்தர்கள் இயல்பு குறித்தும் ஒரு சிறப்பு இதழ். அப்புறம், டாஸ்டாவ்ஸ்கி பற்றிய ஒரு மாபெரும் சிறப்பிதழ். இந்தப் போக்கு எப்படி இருந்தபோதிலும், ‘கல்குதிரை‘ தனி வகையான ஒரு சிறந்த சிற்றிதழாக வளர்ந்துவந்திருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

விசேஷமான தனித்தன்மை கொண்ட மற்றொரு சிற்றிதழ், கோயம்புத்தூரிலிருந்து வெளிவந்த, ‘நிகழ்’ ஆழ்ந்த சிந்தனை, தீர்க்கமான ஆய்வு, தெளிவான அபிப்பிராயங்கள் புத்தக விமரிசனங்கள், சமுதாய மேம்பாடு குறித்த தத்துவச் சிந்தனைகள் ஆகியவை ‘நிகழ்‘ இதழில் இடம்பெற்றுள்ளன. கோவை ஞானியின் ஆழ்ந்த சிந்தனைத்திறனும், பரந்த கல்வியறிவும் நிகழ் பத்திரிகையின் உள்ளடக்கத்துக்குக் கணம் சேர்த்தன.

‘ழ’, ‘கவனம்‘ ஆகிய இதழ்களின் தொடர்ச்சிபோல் விளங்கியது. சென்னையில் தோன்றிய ‘விருட்சம்‘. 1988 பிற்பகுதியில் ஆரம்பமான