பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

351


இவை பிரசுரிக்கின்றன. ஆயினும், இவை போதிய தாக்கம் ஏற்படுத்தக் கூடியனவாக இல்லை.

மேலும், ஆசை பற்றியும், பத்திரிகை நடத்த வேண்டும் என்ற மன—அரிப்புக் காரணமாகவும், சிறுபத்திரிகைகள் பலராலும் தொடங்கப்பெறுகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இப்படி எண்ணற்ற இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. எண்பதுகளிலும், இத்தகைய முயற்சிகள், எண்ணிக்கையில் அதிகமாகவே தோன்றியுள்ளன. அமைப்பிலும் பக்க அளவிலும் இவை சிற்றிதழ்களாகவே இருக்கின்றன. ஆனால், உள்ளடக்கம் பற்றி இவை அதிக அக்கறை காட்டுவதில்லை; ‘தரம்‘ பற்றிய கவலை, இவற்றைத் தொடங்கி நடத்துகிற இளைஞர்களுக்குக் கிடையாது. தங்களைத் தாங்களே தகுதிப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலும் முனைப்பும், அவர்களிடம் இல்லை. எனவே, மிகப் பல சிற்றிதழ்கள், வெறும் ஆர்வத்தின் வெளிப்பாடுகளாகவே காணப்படுகின்றன.

சிறுபத்திரிகைகளின் வளர்ச்சியையும் நலன்களையும் கருத்தில் கொண்டு, அவற்றின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகாண்பதற்கு உதவியாக அமைப்பு ரீதியில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம், சிறுபத்திரிகை நடத்துகிறவர்களுக்கு அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இந்த நோக்கத்துடன், கோயம்புத்தூர் ‘தாராமதி‘ ஆசிரியர் குன்றம் மு. இராமரத்திநம் தலைவராக இருந்து, ‘தாஸ்னா‘— தமிழ்நாடு ஸ்மால் நியூஸ் பேப்பர்ஸ் அசோஸியேஷன்—என்ற அமைப்பு துவக்கப்பெற்றது. சில வருடங்களாக இது செயற்படுகிறது எனினும், இவ்வமைப்பு பலம் பொருந்தியதாக வளர்ச்சி பெறவில்லை.

இதுபோன்ற ஒன்றிரு முயற்சிகள், சென்னையிலும் திட்டமிடப்பட்டன; அவையும் சரியாக உருவாகவில்லை.