பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



என் விருப்பம் போல், கட்டுப்பாடின்றி. எழுதுவதற்கு ‘தீபம் ஆசிரியர் நா. பார்த்தசாரதி இடம் தந்திராவிட்டால் 'சரஸ்வதி காலம்’ ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், ‘பாரதிக்குப்பின் தமிழ் உரை நடை’, ‘தமிழில் சிறு பத்திரிகைகள்' ஆகிய பயனுள்ள கட்டுரை வரிசைகள் பிறந்திருக்க மாட்டா. அமரர் நா. பா. அவர்களுக்கும், ‘தீபம்’ இதழுக்கும் என் நன்றி என்றும் உண்டு.

இது தமிழில் வெளிவந்த சிறுபத்திரிகைகள் அனைத்தையும் பற்றிச் சொல்கிற முழுமையான வரலாறு இல்லை. என் கவனிப்பை ஈர்த்து, என் உள்ளத்தில் பதிவுகளை ஏற்படுத்திய, முக்கியமான பத்திரிகைகள் பற்றிய தகவல்களே இவை. கனமும் ஆழமும் கொண்ட புதுமையான சோதனை முயற்சிகள் பல எனக்குத் தெரியவராமலே போயிருக்கலாம். அப்படி விடுபட்டிருக்கக் கூடியவற்றுக்கு எனது அறியாமைதான் காரணம் ஆகும். மற்றப்படி அத்தகைய முயற்சிகளை அலட்சியப்படுத்துவதோ, புறக்கணிப்பதோ என் எண்ணமில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்தக் குறையை இப்போது மணிவாசகர் பதிப்பகம் தீர்த்து வைக்கிறது. இதை அழகான நூல் வடிவில் கொண்டுவரும் மணிவாசகர் பதிப்பகத்துக்கும். அன்புடன் உதவிய நினைவில் வாழும் பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பனார் அவர்களுக்கும் என் நன்றி.

வல்லிக்கண்ணன்.