பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பகுத்தும், வகுத்தும், கூட்டியும், குறைத்தும் சமய வாதிகள் தத்தமக்கேற்றவாறு கற்றும் கற்பித்தும் பின்பற்றியும் வருகின்றனர். சமயத்தால் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது சமயச்சார்புடைய தத்துவங்கள் அந்த அந்தச் சமயத்தினரால் மட்டுமே போற்றப்படும். எத்தனை உயர்ந்ததென்று போற்றப்பட்டாலும், அயல் மதத்தினர் அவற்றைப் பொருட் படுத்துவதில்லை. அவரவர் மதம் அவரவர்க்குப் பெரிது. இதனால் யாரும் யாரையும் குறை கூறவோ குற்றம் சாட்டவோ தேவையில்லை. அவரவர் வழியில், தடத்தில் பயணம் செய்து பயன் அடையலாம். கூறப்பட்ட அறுபத்து நான்கு கலைகளும் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட செயல்முறைகளாகும். கலை, தொழிலாகவும், தொழில் கலையாகவும் பயன்படும் தன்மைக்கேற்ப மாறி நிற்பதும் உண்டு. கட்டடக்கலையின் அழகு தாஜ்மஹால். கட்டுவது தொழில். கட்டப்பட்டது அழகான கலைப்பொருள். இவ்வாறே சிற்சில கலைகள் தொழிலாகவும். தொழில் கலையாகவும் உருமாற்றம் அடைவது எண்ணி மகிழத் தக்க ஒன்றாகும். கலையாயினும், தொழிலாயினும் எல்லாவற்றையும் ஒரு மனிதன் தன்வாழ்நாளில் கற்றுத் தேர்ச்சியடைந்து அதனால் பயன் அடைவது என்பது இயலவே இயலாது. ஓரிரு கலைகளைக் கற்று. தானும், சமுதாயமும் மேம்பாட்டையும்படி வாழ்ந்தாலும் அது பாராட்டுதலுக்குரிய, போற்றுதலுக்குரிய வாழ்க்கையாக அமையும். ஞானவெட்டியான் என்னும் தமிழ் நூல் மேற்கூறப்பட்ட தொண்ணூற்றாறு தத்துவங்களையும் உடலில் கண்டு விளக்குகிறது. அவற்றுள் பெரும்பாலோர் படித்திராத ஒருசிலவற்றிற்கு ஞானவெட்டியானில் கண்டுள்ளவாறு விளக்கம் கூறலாம். இடைகலை, பிங்கலை, சுழிமுனை, அத்தி, சிங்கு, புருஷன், காந்தாரி, அலம்புருடன், குருதன், சங்குனி ஆகியவைகள் தசநாடிகள் எனப்படுகின்றன. இவற்றுள் இடைகலை இடதுபெருவிரல் மேலும், பிங்கலையானது வலது பெருவிரலிலும் சுழிமுனை சுத்தமாகிப் பரஞ்சுடர் ஒளிமேலும் ஓங்காரமாய்ச் சுற்றியே நிற்கும். காந்தாரி நாடியானது கண்டத்தினின்று கலந்து, நீர் பாய்ந்திடும். அத்தியும், சிங்குவையும் ஆகிய நாடிகள் அவத்தைகள் நான்கையும் (ஜாக்ரதம், சொப்பனம், சுஷீப்தி, துரியம்)அறிவிப்பதாகும். அவத்தை என்பது நிலைமாற்றமாகும்.