பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 செரித்துவிட்டது என்பதையும் நன்கு உணர்ந்த பின்பே அடுத்து உடலுக்குப் பொருந்துகின்ற உணவை அளவாக உண்ண வேண்டும். குளிர்காலம், கோடைகாலம், வேனிற் பருவம், வெஃகைப் பருவம் போன்ற பருவகாலங்களையும், காலை, மாலை இரவு எனச் சிறுபொழுதுகளையும் எண்ணிப்பார்த்து உணவு கொள்ள வேண்டும். இவ்வாறெல்லாம் எண்ணிப் பார்க்காமல் மனம்போனபடி உண்டால், உண்டு களித்தால் மரணத்தை அறிவிக்கும் நோய்வாய்ப்படும் நிலைமை ஏற்பட்டுவிடும். தேனே எனினும் காலமும் அளவும் ஒத்துப்போகவில்லை என்றால் நஞ்சாகிவிடும். அளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சாகும் என்ற பழமொழியும் எண்ணிப் பார்க்கத் தகுந்ததாகும். அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து (குறள் 944) வாதம், பித்தம், சிலோத்துமம் என்று சொல்லக் கூடிய நாடிகள் நம்முன் மாறுபட்டு நோய் உண்டாக்காத உணவுவகைகளைத் தெரிந்து உண்ண வேண்டும். ஆசைஆசையாக உள்ளம் விரும்பியபடி அளவு கடந்து உண்ணாமல் பிணி வாரா அளவில் உண்ண வேண்டும். இவ்வாறு உண்டால் நோயினால் உடம்பின் கண் தங்கியுள்ள உயிர் துன்பம் உறாது. குறைந்த அளவு உணவு எப்போதும் நலமே தரும். உண்ணும் உணவைப் பற்றி உணவின் அளவு, காலம், அவ்வுணவினால் உடலுக்கும் உயிருக்கும் உண்டாகும் நன்மை ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் வருத்தும் நோய் அண்டாது. இளம் வயதிலேயே நல்ல உணவு நெறியைப் பின்பற்றினால் அளவற்ற நன்மை உண்டாகும். மாறுபா டில்லா உண்டி மறுத்துண்ணின் ஊறுபா டில்லை உயிர்க்கு (குறள் 945) நன்கு பசி எடுத்த பின் நிறைய உண்ண ஆசையாய் இருக்கும். சுவையான உணவு நமக்காகக் காத்திருக்கிறது என்று அறிந்தால் ஆசையும் ஆர்வமும் மேலெழும். ஒரு பெருமூச்சோடு ஆசையையும் ஆர்வத்தை ஆறப்போட்டு விட்டு உண்ணலாம். அளவில் கொஞ்சம் குறைத்து உண்டால், உடலால் பெறும் இன்பம் குறையவே குறையாமல் இருக்கும். மனம், மொழி, மெய் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருந்து இயங்கினால் யோகியர் அடையும் இன்பம் உண்டாகும். குறைத்து உண்ணுபவனை யோகி என்பர்.