100
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
இக்காலத் தமிழ் மரபில், தேவையில்லாமல் 'கள்' விகுதி சேர்த்தே எழுதவும் பேசவும் செய்கின்றனர். முத்தமிழை, 'முத்தமிழ்கள்' என்று நாம் கூறுவதில்லை. எட்டுத்தொகையை 'எட்டுத்தொகைகள்' என்றா கூறுகிறோம்? ஆனால், சிலர், இதனைப் புரிந்துகொள்ளாமல் 'மூவேந்தர்கள்','அறுசுவைகள்', என்றே பேசுகின்றனர். எழுதவும் செய்கின்றனர். இத்தகைய பிழைகளைக் கண்டறிந்து திருத்திக் கொள்ளலாம்.
அறிவோம்! தெளிவோம்!
முக்கனி, முக்கனிகள் - எது சரி?
முக்கனி என்பதே சரி.
―
கனி கனிகள், சுவை சுவைகள் இவை சரியான ஒருமை, பன்மைச் சொற்கள். ஆனால், முக்கனி என்பதே ஒன்றிற்கு மேற்பட்ட கனியைக் குறிப்பதால், இதனுடன் 'கள்' விகுதி சேர்த்து 'முக்கனிகள்' என்று பேசுவதும் எழுதுவதும் தவறாகும். (முக்கனி (மூன்று கனி) - மா, பலா, வாழை)
―
ஒருமை பன்மை குறித்த புரிதல் எல்லாருக்கும் உண்டு. ஆனாலும் ஏன் இதில் தவறு வருகிறது? ஒரு தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்ச்சொற்கள் இடம்பெறும்போது இந்த மயக்கம் ஏற்படக்கூடும். எடுத்துக்காட்டாக,
விஷக்காய்ச்சல் நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் மக்களிடையே பரவி
வருகிறது.
இந்தத் தொடரில் விஷக்காய்ச்சல், மாவட்டங்கள், மக்கள், ஆகிய அனைத்துமே பெயர்ச்சொற்கள்தாம். இவற்றுள் விஷக்காய்ச்சல் என்பது ஒருமை. அடுத்த இரு சொல்லும் பன்மை. எனவே, பரவுதல் பரவுதல் என்னும் வினைமுற்றுக்கு ஒருமையைப் பயன்படுத்துவதா, பன்மையைப் பயன்படுத்துவதா என்னும் குழப்பம் ஏற்படலாம்.
இங்கு நாம் நினைவிற்கொள்ள வேண்டியது எத்தனை பெயர்ச்சொற்கள் இருந்தாலும் எழுவாய் என்பது ஒன்றுதான். அதாவது, குறிப்பிட்ட வினையைச் செய்வது யார் அல்லது எது என்பதுதான் எழுவாய். இங்கே பரவுவது எது? மாவட்டங்களா, மக்களா, காய்ச்சலா? எனக் கேட்டால் காய்ச்சல் என்பது தெளிவாகத் தெரிகிறது. இஃது ஒருமை. எனவே வினைமுற்றிலும் ஒருமையைப் பயன்படுத்த வேண்டும்.
எந்தத் தொடராக இருந்தாலும் அதில் உள்ள செயலைச் (வினையை) செய்வது யார் அல்லது எது என்று பார்க்க வேண்டும். கொடுக்கப்படுகிறது / கொடுக்கப்படுகிறார் என்று வந்தால் எதற்கு / யாருக்கு என்பதைப் பார்க்க வேண்டும். அது ஒருமையா, பன்மையா எனப் பார்க்க வேண்டும். அதற்கேற்ப வினைமுற்றில் ஒருமையை அல்லது பன்மையைப் பயன்படுத்த வேண்டும்.