தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
173
மல்லாக் கொட்டை, மணிலாக் கொட்டை என்பது மலாய் மொழியில் இருந்து வந்த பெயர். பீங்கான் என்ற மண் பாத்திரம் சீனத்திலிருந்து வந்ததால் அந்த சீனப் பெயரையே நாம் பயன்படுத்துகிறோம்.
சிங்கள மொழி நம் தமிழ் மன்னர்கள் ஆட்சி அங்கு நடந்ததாலும், திருமண உறவுகள் இலங்கையோடு நம் தமிழ் மன்னர்கள் கொண்டிருந்ததாலும் தமிழுடன் கலந்தது.
ஈழம், முருங்கை, அந்தோ ஆகியவை சிங்களம் நமக்குக் கொடுத்த சொற்கள்.
6.3.6 சரபோஜி கால மாற்றம்
முஸ்லீம் மன்னர்களைப் போன்று நம் தமிழகத்தை ஆண்ட சரபோஜி மன்னர்களால், மராத்தி மொழி சில சொற்களைத் தமிழுக்குக் கொடுத்திருக்கிறது. பெரும்பாலும் உணவுப் பண்டங்களின் பெயர்களையே மராத்தி மொழி நமக்குத் தந்திருக்கிறது.
சேமியா, கிச்சடி, பட்டாணி, சொஜ்ஜி, ஜாடி, குண்டா, வில்லங்கம், சலவை, ஜாஸ்தி
போன்றவை மராத்தி நமக்குத் தந்ததில் இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சொற்கள்.
6.3.7 விஜயநகரக் கொடை
விஜயநகர நாயக்கர் காலத்தில் தெலுங்கு, கன்னடச் சொற்கள் பெருமளவில் வந்தன.
பெரிய கொலுசு வாங்கினேன்! என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறோம். கொலுசு என்பது தெலுங்குச் சொல்.
அதோடு உப்புசம், சளிப்பு, கடப்பாரை, குப்பம், துரை, தீவட்டி, கட்டடம் ஆகியவை தெலுங்குச் சொற்கள் சொத்து, அட்டிகை, கெம்பு போன்றவை கன்னடச் சொற்கள்.
6.3.8 போர்த்துக்கீசியர் வரவு
அரசர்கள் ஆட்சி முடிவுக்கு வரத் தொடங்கிய காலத்தில் தமிழகத்துக்குள் வந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள். அவர்கள் பறங்கியர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கொண்டு வந்த பொருள்கள் அந்தப் பெயரிலேயே அழைக்கப்பட்டன. பறங்கிக்காய் போன்றவை அதற்கு எடுத்துக்காட்டு.
கடுதாசி, பேனா, வாத்து, அலமாரி, மேசை, சாவி, அன்னாசி, பீப்பாய், ஏலம், சன்னல், தோசை, புனல், பொத்தான் போன்றவை போர்த்துக்கீசியச் சொற்கள்.
6.3.9 பிரெஞ்சு வரவு
பிரெஞ்சு மொழி, ஆங்கில மொழியைப் போலின்றிச் சற்று மாற்றமுடையதாய் இருந்தது. அதோடு பிரெஞ்சு அரசாங்கம் பாண்டிச்சேரியைத் தங்கள் இடமாக வெகுகாலம் ஆண்டு வந்தது. இந்த மொழியிலிருந்து ஆஸ்பத்திரி, பீரோ போன்ற சொற்கள் இன்றும் வழக்கில் உள்ளன.