46
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
7. எண்ணல் அளவையாகு பெயர்
ஓர் எண்ணல் அளவையின் பெயர் அந்த எண்ணிக்கையில் உள்ள பொருளுக்கு ஆகி வருவது எண்ணல் அளவையாகு பெயர் எனப்படும்.
(எ.கா) ஒன்று பெற்றால் ஒளி மயம்.
இரண்டுக்கும் மேல் எப்போதும் வேண்டா
இவற்றில் ஒன்று, இரண்டு என்னும் எண்ணல்
அளவைப் பெயர்கள் அந்த
எண்ணுள்ள பொருளுக்கு (குழந்தைக்கு) ஆகி வந்திருப்பதால் எண்ணல் அளவையாகு பெயர் எனப்பட்டன.
8. எடுத்தல் அளவையாகு பெயர்
ஓர் எடுத்தல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வருவது எடுத்தல் அளவையாகு பெயர் எனப்படும். கிலோ, கால் கிலோ, அரைக் கிலோ என்று சொல்வது.
(எ.கா) மூன்று கிலோ வாங்கி வா.
இவற்றில் கிலோ என்னும் எடுத்தல் அளவைப் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளது.
9. முகத்தல் அளவையாகு பெயர்
திரவப் பொருளை முகந்து அளப்பது முகத்தல் அளவை ஆகும். ஒரு முகத்தல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வருவது முகத்தல் அளவையாகு பெயர் எனப்படும்.
(எ.கா) ஐந்து லிட்டர் வாங்கி வா.
நான்குபடி கறக்கும்
இவற்றில் லிட்டர், படி என்னும் முகத்தல் அளவைப் பெயர்கள் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளன.
10. நீட்டல் அளவையாகு பெயர்
நீட்டி அளப்பது நீட்டல் அளவை ஆகும். ஒரு நீட்டல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வருவது நீட்டல் அளவையாகு பெயர் எனப்படும்.
(எ.கா) இரண்டு மீட்டர் கொடுங்கள்.
ஐந்து முழம் வாங்கி வந்தான்.
இவற்றில் மீட்டர், முழம் என்னும் அளவையின் பெயர்கள் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளன.