உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

63







ஒலிமரபு மட்டுமின்றிப் பனையோலை, மாவிலை போன்ற தாவர உறுப்புப் பெயர் மரபுகளையும் மான் கன்று, நாய்க்குட்டி, அணிற்பிள்ளை, கிளிக்குஞ்சு போன்ற இளமைப் பெயர் மரபுகளையும் அறிந்துகொண்டு முறையாகப் பயன்படுத்தலாம்.

பெயர் மரபு, ஒலி மரபு ஆகியவற்றுடன் வினைமரபும் இக்காலத்தில் பயன்பாட்டிலுள்ளது.

நீர் குடித்தான், பால் அருந்தினான், உணவு உண்டான் என்பன போன்றும் காற்று வீசியது, மேகம் திரண்டது, மின்னல் மின்னியது, இடி இடித்தது, மழை பெய்தது, பனி கொட்டியது என்பன போன்றும் ஒவ்வொரு செயலைக் குறிக்க ஒரு மரபுச் சொல் வழங்கிவருவதையும் அறிந்துகொண்டு, சரியாகப் பயன்படுத்தலாம்.

இணைமொழிகள்

நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் இணைமொழிகளின் பயன்பாடு மிகுதியாகவே உள்ளது. அவற்றையெல்லாம் தொகுத்து வைத்தால், பொருத்தமாகப் பயன்படுத்த அறியலாம். இணைமொழிகளைப் பொருள் அடிப்படையில் நேரிணை, எதிரிணை, செறியிணை என மூன்றாக வகைப்படுத்துவர்.

ஒரே பொருள் தரும் இருசொல் அடுத்தடுத்து வருவது நேரிணை.

(எ.கா.) பேரறிஞர் அண்ணா பேரும்புகழும் பெற்று விளங்கினார்.

எதிர்மறைப்பொருள் தரும் இருசொல் அடுத்தடுத்து வருவது எதிரிணை.

(எ.கா.) கபிலன் இரவுபகல் பாராது அயராது உழைத்தான்.

ஒரு பொருளின் செறிவை (அடர்த்தியை) வெளிப்படுத்துமாறு ஒரே சொல் அடுத்தடுத்து வருவது, செறியிணை.

(எ.கா.) புல்தரை பச்சைப்பசேலெனக் காட்சியளித்தது.

துறைதோறும் வழங்கும் சொற்கள்

ஒவ்வொரு துறையிலும் பல சொற்கள் வழக்கத்தில் உள்ளன. புதிய புதிய சொற்களும் ஆக்கம் பெறுகின்றன. அண்மைக்காலத்தில் வளர்ச்சி பெற்றுக் கோலோச்சுவது, கணினித் துறை. இத்துறை சார்ந்த சொற்கள் மொழியாக்கம் செய்யப்பட்டும் மொழிபெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு செய்யப்பட்டும் வழங்குகின்றன. சுட்டி, இணையம், உலவி, புலனம், கீசகம், விரலி, செயலி, மின்னஞ்சல் என்பன அவற்றுள் சிலவாகும். இதுபோன்று பல துறைகளிலும் வழங்கும் சொற்களை அறிந்துகொண்டால் அவற்றைப் பயன்படுத்துவதோடு, சொற்களஞ்சியத்தையும் பெருக்கிக் கொள்ளலாம்.