உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

67






ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்


பேச்சுமொழியில் ஒரு சொல், ஒரு பொருளை உணர்த்தும். உணர்த்தும். சிலபோது, வேறொரு பொருளையும் உணர்த்தும். அவ்வாறு உணர்த்தும்போது, ஒரு பொருள் நிலைபெற்றும் மற்றொரு பொருள் வழக்கிழந்தும் போகலாம். எடுத்துக்காட்டாகக் 'கவலை' என்னும் சொல்லுக்கு இரண்டாகப் பிரியும் இடம் என ஒரு பொருளும் மனவருத்தம் என மற்றொரு பொருளும் உள்ளன. இப்போது, 'கவலை' என்பது, மனவருத்தம் என்ற ஒரு பொருளை மட்டுமே குறிக்கிறது.

நீங்களும் இவை போன்ற சொற்களைத் தொகுத்துப் பட்டியல் உருவாக்கலாம்.

ஒரு பொருளுக்கு ஒரு சொல்

ஒரு பொருளை உணர்த்த, ஒரு சொல்லே போதுமானது. அவ்வாறின்றி ஒரு பொருளைக் குறிக்க, இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட சொற்கள் இருக்குமானால், ஒன்று நிலைபெற மற்றவை வழக்கிழக்கும். எடுத்துக்காட்டாக, 'வீடு', 'இல்', 'மனை' போன்ற சொற்கள் 'இல்லம்' (வீடு) என்னும் ஒரே பொருளைக் குறித்தன. இப்போதைய வழக்கில் 'இல்' என்னும் சொல்லை, இலக்கியத்தில் மட்டுமே காணமுடிகிறது. 'மனை' என்னும் சொல்லோ, 'வீடு கட்டுவதற்குரிய இடம்' என்னும் பொருளைத் தருகிறது. பேச்சுவழக்கில், ஒருவர் 'நான் மனை வாங்கியுள்ளேன்' என்று கூறினால், அவர் வீடு வாங்கியுள்ளதாகப் பொருளன்று, வீடு கட்ட இடம் வாங்கியுள்ளார் என்பதையே உணர்த்துகிறது.

உயர்பொருட்பேறு

இழிந்த பொருளில் வழங்கி வந்த சொற்கள், காலப்போக்கில் உயர்ந்த பொருள்களைத் தருவதாகவும் மாற்றமடைந்துள்ளன. இவ்வாறு வருவனவற்றை 'உயர்பொருட்பேறு' எனக் குறிப்பிடுகின்றனர். முன்பு, கள்ளுண்டு களித்தல் என்பதைக் 'களிப்பு' என்றனர். இன்று, 'களிப்பு' என்பது, 'மனமகிழ்ச்சி' என்னும் உயர்பொருளில் வழங்குகிறது.

இழிபொருட்பேறு

முன்பு, உயர்ந்த பொருளில் வழங்கிவந்த சொல், காலப்போக்கில் இழிந்த பொருளைத் தருவதும் உண்டு. அவ்வாறு வருவனவற்றை 'இழிபொருட்பேறு' எனக் குறிப்பிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, 'நாற்றம்' என்னும் சொல், முன்பு 'நறுமணம்' என்னும் பொருளைத் தந்தது. இப்போது, 'துர்நாற்றம்' (விரும்பத்தகாத வாசனை) என்னும் இழிந்த பொருளைத் தருகிறது.

சிறப்புப் பொருட்பேறு

முன்னர் பலவற்றிற்கும் பொதுவாக வழங்கிய சொற்கள், அவற்றுள் ஒன்றை மட்டுமே குறிப்பதாக வருவனவற்றைச் சிறப்புப் பொருட்பேறு என்கிறோம். எடுத்துக்காட்டாக, எள்ளின் நெய், பாலின் நெய் என்பனவற்றைக் குறித்த 'நெய்' என்னும் சொல், இப்போது, பாலின் நெய்யை மட்டும் குறிக்கிறது. விலங்குகளைப் பொதுவாகக் குறித்த 'மான்' என்னும் சொல் இப்போது, மான் என்னும் ஒரு விலங்கினத்தை மட்டுமே குறிக்கிறது.

இவைபோன்ற பல சொற்களைத் திரட்டித் தொகுப்பேடு உருவாக்குங்கள்.