உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்






பாடம்-3

தொடர் அமைப்பு


3.0 முன்னுரை

எழுத்துகள் ஒன்றோ பலவோ சேர்ந்து பொருள் தரும்போது சொல்லாகிறது. சொற்கள் பல சேர்ந்து தொடர்கள் உருவாகின்றன. பல சொல் சேர்ந்து வந்தாலும், பொருள் முடிவுபெற்று வந்தால் மட்டுமே அவை தொடர்கள் எனப்படும். தொடருக்கும் (Sentence) சொற்றொடருக்கும் (Phrase) சிறு வேறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக, "வட்டமான நிலா" என்பது, ஒரு சொற்றொடர். "நான் வட்டமான நிலாவைக் கண்டேன்" என்பது பொருள் முடிவுபெற்ற தொடர். நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் இவ்விரண்டுமே பயன்பாட்டில் உள்ளன. தொடர் உருவாவதற்கு எழுவாய், செயப்படுபொருள், பயனிலை தேவை. இவை மூன்றனுள் ஏதேனும் ஒன்று இல்லாமல்கூடத் தொடர் அமையலாம். அவற்றைப் பற்றி விரிவாக இப்பாடத்தில் அறிந்துகொள்வீர்கள். பலவகைத் தொடர்களையும் அவற்றின் பயன்பாடுகளையும் இந்தப்பாடம் உங்களுக்கு எடுத்துரைக்கிறது. இதன்மூலம், தமிழில் பயின்று வரும் தொடர்களை தொடர்களை அடையாளம் காணவும் அவற்றைப் பிழையின்றிப் பயன்படுத்தவும் இந்தப்பாடம் உங்களுக்கு உதவும்.

3.1 எழுவாய்

சொற்கள் பல தொடர்ந்து வந்து ஒரு கருத்தை உணர்த்தினால் அது தொடர் எனப்படும். ஒரு தொடருக்கு எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் இன்றியமையாதவை. செயப்படுபொருள் இல்லாமலும் தொடர் அமையலாம். ஒரு தொடரில் முதலில் எழுவாயும் இறுதியில் பயனிலையும் வரும். சில தொடரின் இறுதியில் செயப்படுபொருளும் வரும். சில தொடர்களில் வைப்புமுறை மாறியும் வரும்.

தொடர் அல்லது சொற்றொடர் என்னும் தமிழ்ச்சொல்லுக்கு இணையான வடமொழிச் சொல் வாக்கியம் என்பதாகும். தொடர் என்றாலும் வாக்கியம் என்றாலும் ஒரே பொருளைத்தான் உணர்த்தும்.

ஒரு தொடர் உருவாவதற்குக் காரணமாக அமைவது எழுவாய். அல்லது ஒரு தொடரில் யார், எது, எவை, யாவர் எனும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே எழுவாய் ஆகும். எழுவாய் வெளிப்படையாக வருவதும் உண்டு. மறைந்து வருவதும் உண்டு. அப்படி மறைந்து வரும் எழுவாயைத் தோன்றா எழுவாய் என அழைப்பர்.

எழுவாய் எப்போதும் ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல்லாக மட்டுமே வரும். இஃது உயர்திணையையும் குறிக்கும்; அஃறிணையையும் குறிக்கும்; ஒருமையாகவும், பன்மையாகவும் வரும். செயலைக் குறிக்கும் வினைச்சொல்லாக எழுவாய் வராது.

எடுத்துக்காட்டு -1 (வெளிப்படையாக வரும் எழுவாய்)

1. கவிதா கவிதை எழுதினாள். (யார்)

2. மாணவர்கள் பாடம் படித்தனர் (யாவர்)

3. நாய் வீட்டைக் காக்கும் (எது)

4. பறவைகள் இரை தேடின (எவை)