பக்கம்:தமிழ்க் காதல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுத்தலாம்: ஒரு வரம்பிற்குள் கொண்டுவரலாம்:, தடுமாற்றங்களைத் தடுக்கலாம் எனத் தமிழ் முன்னோர் கருதியதாகத் தோன்றுகிறது. பழந்தமிழர்கள் பெண்ணுக்குத் தந்த தலைமையும் உரிமையும் அகப்பாடல்களில் காணப்படுகின்றன. பரத்தைமைக் கேடிருந்த இடத்தில் மனைவியின் உரிமை மதிக்கப்பட்டமை இப்பாடல்களில் எதிரொலிக்கின்றது. இதனை மூதறிஞர் எடுத்துக்காட்டும் திறம் சிந்தனைக்கு விருந்தாகிறது. அகத்தலைமை பெண்ணுக்கே உரியது. மகவைப் பொறுக்கும் பெண்ணினத்துக்கே குடும்பத்தைச் சுமக்கும் பொறுப்பு உரியதும் எளியதும் நல்லதும் ஆம். அக மாந்தர்கள் பலராயினும் தலைவனுட்பட எல்லோரும் தலைவியை நோக்கியே இயங்குபவர்களாக அகப்பாடல்களில் படைக்கப்படுகின்றனர். அகத்திணை ஓர் பெண்ணிலக்கியம். அகத்திணை ஓர் கற்பிலக்கியம்' என அறுதியிட்டுக் கூறுமாறு சான்றுகள் தந்து விளக்கப்படுகிறது. இந்நூலின் பிறிதொரு தனிச்சிறப்பு கரணம் பற்றிய விளக்கங்கள். 'பொய்யும் வழுவும் எனத் தொடங்கும் தொல்காப்பியக் கூற்றுக்கு. இதுகாறும் கூறப்பட்டுவந்த வழிவழி விளக்கங்கள் மறுக்கப்படுகின்றன. திருமணமான அண்மையில், ஒருத்தி மணமாகாதவள்போல் தோன்றக் கூடுமல்லவா? அப்பொய்த்தோற்றம், ஓர் ஆடவன் அவள்மீது பார்வை செலுத்த இடந்தருமாதலின், அப் பொய்யால் விளையும் வழுவாகிறது அது. இவை இரண்டும். தவிர்க்கப்பட்டு, ஒரு பெண் மணமானவள் என அடையாளம் காட்டவே கரணம் தேவைப்பட்டது. இவ்வடையாளம் காலந்தோறும் வேறுபட்டு வருவது. சங்ககாலத்தில் ஒருபெண் திருமணமாகும்போது, முதலில் சிறுபிள்ளைப்பருவம் முதலாக அணிந்திருந்த ஒருவகைச் சிலம்பு நீக்கப்பட்டது. கூந்தலில் மலர்சூடுவது ஓர் அடையாளம் ஆனது. ஆடவர்க்கு மணமானவர் எனக்காட்டும் அடையாளம் வேண்டாவா எனக்கேட்டு, அதனையும் அலசுகிறது இவ்வாய்வு, ஒளிச்சிதறல்கள் இந்நூலைப் படித்துப்போகும்போது பல அரிய கருத்துக்கள், ஒளிச்சிதறல்கள் போலவும் ஒளிவீசும் முத்துக்கள் போலவும் ஆங்காங்கு ஒரிரு வரிகளில் சுட்டிக் கூறப்படுகின்றன. சான்றுக்குச் சில பார்க்கலாம். அகநானூறு நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு கலித்தொகை என்ற அகத்தொகை ஐந்தனுள்ளும் ஐங்குறுநூற்றுக்குத்தான் தக்கார் ஒருவரால் துறைகளும் நுண்மைகளும் நயம்படக் காட்டப்பட்டுள. ஏழுதிணைக்குரிய பாடல்களையும் கொண்டிலங்குவது கலித்தொகையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/17&oldid=878897" இலிருந்து மீள்விக்கப்பட்டது