பக்கம்:தமிழ்க் காதல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை முனைவர் இரா. சாரங்கபாணி மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் படைத்த அரும்பெரும் நூல்களான வள்ளுவமும் தமிழ்க் காதலும் தமிழருக்கு இருகண்கள் போன்ற சிறப்பின். அவ்விரண்டும் அவர் தமிழ்க் கடலில் மூழ்கித் திளைத்து முயன்றெடுத்த நன்முத்துக்கள். அவற்றுள் தமிழ்க்காதல் பண்டைத் தமிழ்மக்களின் உயரிய காதல் வாழ்வை உலகிற்கு உணர்த்துவது. சங்க இலக்கியத்தின் அகத்திணை குறித்த 1862 பாக்களையும் பல நோக்கில் வகைப்படுத்து நுனித்தாய்ந்து பல புதுச் செய்திகளை வழங்குவது. அகத்திணைக்கு அடித்தளமாம் காதற் கூறுகளை இன்றைய பாலியல் அறிஞர்களும் ஏற்கும் வண்ணம் தக்க பல ஆங்கில மேற்கோள் தந்து தெளிவு செய்வது. உள்ளத்தோடு இயைந்த உடற்புணர்ச்சி உயிரை வளர்க்கும் ஆற்றலுடையது என்பதைப் புலப்படுத்துவது. இதனை வள்ளுவப் பேராசான் 'உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டல்’ என்பர். அகத்திணை கைக் கிளை, ஐந்திணை, பெருந்திணை ஆக ஏழு என அகத் திணையை வகைப்படுத்தினும், ஐந்திணை பற்றியே சங்க அகப் பாடல்கள் சிறப்பித்துப் பாடலாயின. அகத்திணையும் ஐந்திணையும் ஒரு பொருள் குறிப்பன அல்ல. அகத்திணையுள் கைக்கிளையும் பெருந்திணையும் அடங்கும். இவ்விரண்டும் அகத்திணைக்கு வேறுபட்டன ஆகா என்ற கருத்துக்களைத் தக்க சான்றுகளால் நிலைநாட்டியுள்ளது. இந்நூல். உள்ளப் புணர்ச்சி இந்நூலாசிரியர் தொல்காப்பியத்தையும் சங்கப் பாடல்களையும் கசடறக் கற்று, மதிநுட்பத்தோடு அகத்திணையை ஆய்ந்தமையால் பல புதிய செய்திகள் புலப்படுத்தப்பட்டுள்ளன. காதலர் தம் மன ஒற்றுமையே அகத்தினையின் உயிர்ப்பண்பு இதன்ை உள்ளப் புணர்ச்சி என்ப. எழுவகை அகப்பாடல்களுக்கும் உள்ளப் புணர்ச்சி இன்றியமையாதது. கற்பு எனப்படுவது காதலர் தம் மெய்த் தொடர்புக்குப் பின்னர் வரும் ஒழுக்கம் அன்று. ஒருவரை ஒருவர் உள்ளத்தால் நினைந்த அப்பொழுதே கற்பெனும் திண்மை வேண்டப்படும். களவில் மெய்யுறு புணர்ச்சி இல்லை என்பது பொருந்தாக் கூற்றாகும். ஐந்திணையில் மடலேறுதலுக்கும் பெருந்திணையில் மடலேறுதலுக்கும் வேறுபாடுண்டு. மடலேறுவேன் என வாயளவிற் சொல்லுதல் ஐந்திணையாம்; அவ்வாறன்றி, மடல்மேல் ஏறியே காட்டும் செய்கை பெருந்திணையாம் எனத் தொல்காப்பிய நூற்பாக்கொண்டு விளக்குவர் ப. 61). இரவுக் குறிப்பாடல்கள். தலைவிக்கு முன்பில்லாத ஆற்றலும் துணிவும் ஒட்பமும் காமத்தால் உண்டாகும் என்பதைக் காட்டும் அடிப்படையில் எழுந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/20&oldid=878970" இலிருந்து மீள்விக்கப்பட்டது