பக்கம்:தமிழ்க் காதல்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

தமிழ்க் காதல்


மேலை விளக்கத்திலிருந்து இரண்டு உண்மைக் கூறுகள் தெளிவாகின்றன. ஐந்திணைக் காதல் உலகத்தில் உள்ள ஒழுக்கமே, அதன் கூறுகள் அனைத்தும் ஒரு காதற் சோடியரிடத்து நிகழ்வதில்லை; சமுதாய முழுமை நோக்கின், அவை நிகழாமலும் இல்லை என்பது ஒர் உண்மை. சமுதாயத்தில் பல்வேறு காதலர்களிடைச் சிற்சிலவாகப் பகிர்ந்து காணப்படும் காதல் நிலைகளாதலின், சங்கச் சான்றோர்கள் ஐந்தினையை முழுத்திறமாக இயைத்துப் பாடிற்றிலர்: ஒவ்வொரு காதற்றுறையையும் தனித்திறமாகப் பாடி முடித்தனர் என்பது மற்றோர் உண்மை. சங்கப் பனுவல்கள் தொகை நூல்களாகவும், சங்க அறிஞர்கள் தனிப்பாட்டுப் புலவர்களாகவும் விளங்குவதற்கு உரிய வரலாறு இதுவே. இதனால் சங்கத் தமிழ்க் காலத்துச் சிறுகதை, புதினம், நாடகம், காப்பியம் முதலான இலக்கியப் பெருவகைகள் இல்லை, தோன்றவில்லை என்று பொருள் கொள்ளலாமா? தமிழிலக்கியம் அகம் புறம் என்ற இரு பிரிவினுள் அடங்கும் எனவும், வேறுவகை இலக்கியம் தமிழ் மொழியில் பண்டு முகிழ்க்கவில்லை எனவும். பொதுவான பிழையான ஒரு நம்பிக்கை இன்று கற்றாரிடையும் கற்பாரிடையும் நிலவி வருகின்றது. காதலையும் வீரத்தையும் திணை துறைபட நெறிப்படுத்திய இலக்கணச் சிறப்பு தமிழுக்கே உரியது. ஆதலின், பண்டைத் தமிழ்ப் புலவர்கள் அகப்பாட்டுப் புறப்பாட்டுக்களை பாடுதல் என்பது உரிமையும் கடமையும் ஆயிற்று. தமிழ் இலக்கண ஆசிரியர்களும் அகத்திணை புறத்திணை இலக்கணங்களை வழிவழி நூற்பிப்பது முறையாயிற்று. இவ்விரண்டும் தமிழுக்கே உடைய சிறப்பிலக்கியங்கள், சிறப்பிலக் கணங்கள், பொது இலக்கிய வகைகளும் நம் மொழிக்கண் உள என்பதைத் தொல்காப்பியம் தெளிவாக்கும்.

அம்மை அழகு தொன்மை தோலே
விருந்தே இயைபே புலனே இழையெனாஅப்
பொருந்தக் கூறிய எட்டு (தொல். 1258)

என்றபடி எட்டு வகையான பிற இலக்கியங்கள் இருந்தன எனவும், இவை வனப்பு” என்ற பொதுப்பெயரால் வழங்கப்படும் எனவும், வரலாறு, பழம்பொருள், புதுப்பொருள் என்ற கருத்து நிலைக்களத்தில், பல்வேறு யாப்பில் இவை செய்யப்படும் எனவும், செய்யுளியல் ஒரளவு விதந்து கூறுகின்றது.இவ்விலக்கியங்கள் பற்றிய விரிவான இலக்கணம் தொல்காப்பியத்தில் இல்லை. நினைத்த பொருள்மேல் நினைத்த யாப்பின் வழி நினைத்த அமைப்புத் தழுவி இவற்றைச் செய்யும் உரிமையைப் புலவர்க்கு விட்டுவிட்டனர் போலும். இவ்வெட்டினுள் அகமும் புறமும் அடங்கவில்லை என்பதை நினைத்துக் கொள்மின். இவ்விரண்டும் பொருள்வரம்பும், சொல்லும் முறைவரம்பும் உடைமையின், தொல்காப்பியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/239&oldid=1400343" இலிருந்து மீள்விக்கப்பட்டது