பக்கம்:தமிழ்க் காதல்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

தமிழ்க் காதல்


என்ற புறத்துறை இலக்கணமாகத் தோன்ற வேண்டுமாயின், அழிந்த மக்களின் தொகைக்கும், அழியாதிருக்கும் மக்களின் அவலத்துக்கும் சொல்லளவுண்டு கொல்? உலகம் நிலையாது என்பதனைப் போர்க்களம் தமிழர்க்கு உணர்த்தியது. அதனால் காஞ்சித்திணை என ஒரு தனித் திணையைப் புறத்திணைக்கண் வகுத்து காட்டினர். தமிழினம் உயிர்வாங்கி உயிர் வழங்கும் போரினமாகத் திகழ்ந்தது . என்பதனைப் புறவிலக்கியம் தெளிவாக்குகின்றது. ஆதலின் சங்கச் சான்றோர் முற்றும் இனிய திணையாக அகத்திணையை அமைத்தனர்; ஊடற் போருக்கு இடந்தந்து உயிர்ப் போருக்கு இடமின்றியாக்கினர்; பொருள்வயிற் பிரிவு வினை.வயிற் பிரிவுகளைக் கூறி, உயிர்ப் பிரிவைக் கூறாதொழிந்தனர்; போர்க்களச் சிந்தனை மனையகத்துத் தோன்றாவாறு, மெல்லிய செவ்விய இனிய காதல் நிகழ்ச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, இன்னாத கொடிய வலிய காமச் செயல்களைச் சேராதொதுக்கினர்; பொருகளத் தமிழன் வீட்டகத்து இனியனாக வாழ, நினைக்க, மகிழ வழி செய்தனர். ஆதலின் மென்மையான அகத்திணைத் தோற்றத்திற்குத் தமிழினத்தின் வன்மையான போரெண்ணம் ஒரு துாண்டு கோலாயிற்று என்பது என் கருத்து. எவ்வெவ் வகையால் மெத்தென அமைக்கலாம் என்று சங்கச் சான்றோர் கூடி நினைந்து, யான் முன் விளக்கியாங்குப் பொருள் வரம்பு பலவாறு செய்தனர் காண். அதனால் அகத்தினை “புலனெறி வழக்கம்” (தொல், 998) என்ற பெயர்ப் படைப்புப் பெற்றது. புறத்திணையையோ புலனெறி வழக்கம் எனவும் நாடக வழக்குக் கலந்துள்ளது எனவும் யாரும் கூறுதலில்லை. புறப்பொருள் முற்றும் உலகியல் என்பர் இளம் பூரணர். தமிழ்ச் சங்கம் இருந்தது எனவும், அச்சங்கத்தாரின் அறிவுக்கூட்டினால் தோன்றிய ஆக்கங்களே அகத்திணை புறத்திணை எனவும், புறத்திணை அகத்திணை நுண்ணியதாக அமைத்தனர் எனவும் கண்டோம், அறிவரெல்லாம் ஒருங்கிருந்து காதலுணர்ச்சிக்கு மிகையும் குறையும் புகாது வேலியமைத்துச் சீரான அகத்திணை கண்டனரேல், அதற்கு ஒரு பெருநோக்கம் இருத்தல் வேண்டும். வரம்பு எனப்படுவது குறிக்கோளுக்கே,


III

பெயர் குறியாப் பண்பு

மக்கள் நுதலிய அகனைந் தின்ையும்
சுட்டி இருவர்ப் பெயர்கொளப் பெறாஅர் (தொல். 999)

அகத்திணையின் அரிய நூற்பாக்களுள் இஃது ஒன்று, முதலடியில் அகத்திணைக்கு உரிய நிலைக்களத்தையும், பின்னடியில் அகத்திணை பாடும் இலக்கிய முறையையும் அறியலாம். ஐந்திணைக் காதலொழுக்கங்கள் எல்லா மக்களையும் கருதியது ஆதலின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/263&oldid=1400374" இலிருந்து மீள்விக்கப்பட்டது