பக்கம்:தமிழ்க் காதல்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் பாட்டு

253


என்று புதுவிலக்கணம் வகுத்தால் என்னை? இவ்வினாக்கட்கு எதிராக நாமும் சில வினவுவோம். காதற் செய்கைகளைக் கற்பனையாகவேனும் ஒருவர் பெயர்மேல் ஏற்றியும் நிரல் படத் தொகுத்தும் உரைத்தால் என் கெட்டது? தொடர்பற்ற தனி நிகழ்வுகளாகக் கொள்ள வேண்டும் குறிக்கோள் யாது? வினாக்களுக்கு விடையாக அடிப்படை யுண்மைகளைத் தெளிவாக்குவோம்.

முதலாவது உண்மை

அகத்திணையை நுணுக்கமாக ஆராயின், இருபேருண்மைகள் சிறந்து புலப்படும். முதலுண்மையாவது, காதலுறவுகளும் நலங்களும் சால மிக்கிருந்தாலும், யாரொருவர் முழு வாழ்க்கையும் எல்லா இனியனவும் நிரம்பி இராது:இலக்கியத்திற்குக் குறைவற்ற எடுத்துக் காட்டாகாது. வாழ்க்கை என்பது இன்பதுன்பக் கலவியல். இனிமையும் பதமும் பண்புமே கொண்ட ஒர் இலக்கியம் படைக்க வேண்டின், பொறுக்குதல் வேண்டும்;வேறுபட்ட நிலைகளில் வாழும் காதல் மாந்தர்களிடமிருந்து ஆளுக்கொன்றாகக் காதற் கூறுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்வாழ்வு வாழ முனைவான் பலர் வாழ்கையைப் பார்ப்பானன்றோ? நிகழ்ச்சிகளைக் கதையாகத் தொடுப்பது அகப்பாட்டின் நெறியன்று. ஒரு தலைவனின் ஒரு தலைவியின் காதற் பகுதிகளைத் தொடர் கதையாகக் கூறுவதென வைத்துக் கொள்வோம்.ஒரு காதல்நிலையில் ஒருவகை உள்ளத்தைத் தான் புலவன் காட்ட இயலும். கோவலன் கண்ணகியை நலம் பாராட்டுகின்றான் என்ற காதல் நிலையை இளங்கோ புனைவர். அவர்தம் புனைவு ஒருவன் உள்ளத்தளவில் அமைந்து நின்றது. வேறு வேறு தலைவர்கள் வெவ்வேறாக நலம் பாராட்டு வாரன்றோ: அத்திறங்களைப் புனையும் வாய்ப்பினைத் தொடர் புலவன் இழக்கின்றான். சமுதாயத்தில் ஒருவனது காதல் நெஞ்சத்தைக் காட்டுகின்றானேயன்றி, பலர் நெஞ்சத்தைப் புனைந்து சமுதாயப் போக்கைக் காட்டுகின்றான் அல்லன் தொடர்புலவன்.

ஒரு காதல் நிலையில் ஆண் பெண் பலர் உள்ளோட்டங்களை வெளிப்படுத்தும் அமைப்புடையது அகத்திணை. தலைவன் பிரிந்த காலத்துறையில் வைத்துத் தலைவியர் தோழியர்தம் 25 வகையான எண்ணங்களை மாமூலனார் 25 பாடல்களில் புலப்படுத்துவர். மகட்போக்கிய செவிலித்தாய் என்னும் ஒரு துறைமேல் 17 வகையான செவிலி உணர்ச்சிகளைக் கயமனார் 17 பாட்டுகளில் வனைந்து காட்டுவர். மாமூலனாரின் 25 செய்யுட்கள் 450 அடிகளும், கயமனாரின் 17 செய்யுட்கள் 238 அடிகளும் கூடியவை எனினும் இவை தனிச் செய்யுட்கள்; தனித்தனி மனவியல்பை ஒரு காதற்களத்து வைத்துக் காட்டுபவை. இதுவே அகத்திணை பாடும் முறையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/266&oldid=1400377" இலிருந்து மீள்விக்கப்பட்டது