பக்கம்:தமிழ்க் காதல்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் பாட்டு

263


என்ற பாரதியாரின் கண்ணம்மாவில், நோக்குவ எல்லாம் அவையே போறல்” (தொல், 1045) என்னும் காதலுணர்வு தோன்றுகின்றது. “வீட்டினில் கூட்டுக்குள்ளே கிளியெனப் போட்டடைத்தார் கெடுநினைப்பு உடைய பெற்றோர்” என்று பாரதிதாசனார் பாடும்போது, பூங்கோதை இற்செறிக்கப்பட்டாள் என்று அகத் துறையைக் கற்கின்றோம். "பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது பஞ்சனையிற் காற்று வரும் தூக்கம் வராது” என வரும் கண்ணதாசன் திரைப்பாடலில், "பசியடநிற்றல், கண்துயில் மறுத்தல்” (தொல் 1215) என்னும் மெய்ப்பாடுள் அமைந்துள.

மேற்காட்டியாங்கு காப்பியங்கள் அருட்பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரைப்பாடல்கள் என்ற இலக்கிய வகைகளில் எல்லாம் அகத்துறைச் சுவடுகள் மலிந்து புகுந்து கிடக்கும். தமிழ்ப்புலவன் எக்காலத்தன் எந்நிலையன் காதல் பாடினும், ஆண்டு அகத்திணை தோன்றாதிராது என்பதற்கு மேற்காட்டின சில சான்றுகள். என்றாலும் இந் நூல்வகைகளில் வரும் காதல்கள் அகத்திணையாகா, கோவலன் கண்ணகி, சீவகன் தத்தை, இராமன் சீதை, சுந்தரர் பரவை, நளன் தமயந்தி, புருடோத்தமன் மனோன்மணி என்றோர் காதலைப் புனையுமிடங்களில், உரையாளர்களும் விளக்குநர்களும் காட்சி ஐயம் துணிவு இயற்கைப் புணர்ச்சி ஆற்றுதல் ஆற்றாமை என்றின்ன அகத்துறைகள் கூறலாம்; தொல் காப்பிய நூற்பாக்களை மேற்கோளாகக் காட்டலாம்; எனினும் இலக்கிய மாந்தர்களை ஒட்டிவரும் காதல்கள் அகமாகா என்று தெளிக. காப்பியம் முதலிய இலக்கியத்தில் தோன்றும் நல்ல காதலர்கள் நெஞ்சு ஒத்த உள்ளப்புணர்ச்சியுடையவர்களே. இவ்வளவிற்கு அகத்திணை என்று கூறலாமாயினும், அவ்விலக் கியங்கள் அகமுறை தழுவவில்லை. பெயருடையோர் காதற் பெருக்கங்களைப் புனைகின்றனர்; மேலும் அன்னவர் காதல் வாழ்வுகளைத் தொடுத்துத் தொடர்ந்து புனைகின்றன. நிரல்படப் புனையாமை அகப்பொருள்முறை: பெயர்படப்புனையாமை அகப்பாட்டு முறை, ஆதலின் இம் முறையொடுவாரா இலக்கியங்கள் அகம் போலக் காதலைப் பாடினும் அகமாகா என்பது முடிவு. திருமண நாளன்று பல்வேறு சுவையுணவுகளை ஆக்கி ஒருங்கு வைத்து உண்பிப்பர்; இவை வீட்டுணவாகுமா? அன்று ஆயிரம் பேர் வந்து கலந்து உண்பர்; அவர் விருந்தினராவரோ? வீட்டுணவும் விருந்தும் போல்வது அகத் தமிழ், -




அகப்புலவர்கள்

பாடும் புலவர்க்குத் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் உரிமையும் இடமும் அகத்திணை இலக்கியத்தில் இல்லை. அவ்வளவுதான். புலவன் அல்லது புலமகள் தன்னை வெளிப்படுத்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/276&oldid=1394534" இலிருந்து மீள்விக்கப்பட்டது