பக்கம்:தமிழ்க் காதல்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

279


அவ்வெண்ணம் நன்கு மலரவில்லை என்பது களவிற்குச் சிறந்த உடன்போக்கு, அறத்தொடு நிலைத்துறைகளைப் பாட்ாமையாற் போதரும். தமிழில் கோவை ஒரு தனியிலக்கியமாகத் தோன்றி வளர்தற்கு ஐங்குறு நூற்றுத் தொண்டிக் கோவையே மூலம் என்று அறிக.

அகப்பொருட் கோவைக்கே யன்றி அந்தாதி யிலக்கியத்திற்கும் வழிகாட்டியவர் அம்மூவனார். கோவைபட அமைந்த இத்தொண்டிப் பாடல்களே அந்தாதிபடவும் அமைந்துள. இரு புதுமைக்கும் இடனாக ஒரே பத்துப்பாடல்களை யாத்தார் ஆசிரியர். சங்கவில்க்கியத்தின் மொழிநடைக்கு மாறான இவ்விரு புதிய கூறுகளையும் ஐங்குறு நூற்றின் பழையவுரைகாரர் அன்றே கண்டு எழுதியுள்ளனர் என அறிக. - -

அம்மூவனார் நெய்தலறிஞர். நெய்தற்றிணைக்கு உரியது இரங்கற்பொருள் எனினும்,புணர்தல் இருத்தல் ஊடல் என்ற பிறவுரிப் பொருள்களை நெய்தற் சூழ்நிலையில் வைத்துப் பாடியுளர்.

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி நெய்தல் சிதைக்கும் துறைவன்
நல்லன் என்றி யாயின்

பல்லிதழ் உண்கண் பசத்தல் மற்றெவனோ. (ஐங். 170)

என்பது கணவனது பரத்தொழுக்கம் பற்றித் தலைவி புலந்து கூறும் பாட்டு. இது நெய்தல் நிலத்து மருதவொழுக்கம் கூறுவது. புணர் தலுக்கு மலைப்பாங்கும், ஊடலுக்கு வயலிடமும், இருத்தலுக்குக் காட்டுச் சார்பும் சூழ்நிலையாக அமைதல் வேண்டும் என்பது புலனெறி வழக்கம். இவ்வழக்கம் இலக்கியக் கற்பனைக்குச் சிறக்கும் என்பது கருதி நம் முன்னோர் வகுத்தனர். ஊடல் ஒரிடம் கூடல் ஓரிடம் நடை முறையில் இல்லை, இயலாது என்பது வெளிப்படை அம்மூவனார் இயல்புநெறிப் புலவர் போலும். அவர் பாட்டுக்கு நெய்தல்வாழ் மக்களே பெரும்பாலும் தலைமக்கள். ஆதலின், எல்லா உரிப்பொருளுக்கும் களமாக ஒரு திணையையே கொண்டனர். பரத்தையைக்கூட "நெய்தலங் கண்ணி” (ஐங், 135) என்று குறிப்பர்.

திணைக்கலப்பு மணம்

உப்பு விற்கும் உமணக்குடியின் குமரியர் இவர்தம் இரு பாடல்களில் தலைவியராக வருப. உமணப் பெண் தந்தையொடு மலை நாட்டிற்கு உப்பு விற்கச் செல்லுகின்றாள். நெல்லுக்கும் உப்புக்கும் நேர்விலை என்று பண்டமாற்றுப் பகர்கின்றாள். சங்குவளை ஒலிப்ப வீசி நடக்கும் அவள் ஒசிந்த நடையிலும், நாய் குரைக்கக் கேட்டு வெருவும் அவள் மருண்ட பார்வையிலும், உள்ளத்தை அடிமையாக்குகின்றான் ஒர் மலை நாட்டு இளைஞன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/292&oldid=1394730" இலிருந்து மீள்விக்கப்பட்டது