பக்கம்:தமிழ்க் காதல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

தமிழ்க் காதல்


இற்றைத் தமிழ் மொழியின், நாகரிகத்தின் வேறுபாட்டால் ஐயப்பாடு பல தோன்றுதல் இயல்பினும் இயல்பே. ஐயத்தோற்றம் உண்மைத் தோற்றத்துக்கு வழி காட்டும் ஆதலின், அகத்திணைக் கல்வியாளர்க்கு உண்டாம் ஐயக்கூறுகளை முதற்கண் மொழிகுவல், (அ) அகத்தின் இலக்கணம் யாது? அகப்பாட்டு என்பது காதற் பாட்டாயின், காதற்றினை என்று பெயர் வைத்திருக்கலாமே? அகத்திணை எனப் பெயரியதேன்? அகம் காதல் என்பன ஒருபொருட் பன்மொழியா? இடைக்கால உரையாசிரியர்களும் இக்காலப் புலவர் பெருமக்களும் அகத்திற்குக் கூறிவரும் இலக்கணம் தகவுடையதா? (ஆ) அகத்திணை எழுவகைப்படும் என்ற பாகுபாடு இசையுமா? இவ்வெண்ணிக்கைதானும் பிழையெனத் தோற்றவில்லையா? சங்கவிலக்கியத்து 1862 அகப்பாக்களுள் கைக்கிளைக்கு நான்கே, பெருந்திணைக்குப் பத்தே உரியவாகக் கற்கின்றோமே! கைக்கிளை பெருந் திணைகள் அகமாயிருப்பவும், சங்கச் சான்றோர் இவற்றைப் போற்றிப் பாடல் பல செய்யாமைக்கு ஏதுவென்னையோ? தமிழ் இலக்கியமெல்லாம் அகம் புறம் என்னும் வகையிரண்டாய் அடங்கும் என்ற கருத்துரை ஏற்புடைத்தா? (இ) தமிழ் மொழிக்கண் அகத்திணை நூல் பிறத்தற்கு உதவிய சூழ்நிலைகள் யாவை? அகத்திணைக்கு விதிகள் வகுத்தார் யாவர்? ஒப்பற்ற அறிவு முனைவன்.ஒருவன் இது விதி, இது மரபு என்று கற்பித்தருளினனோ? அன்றிப் பலர் கூடி ஆய்ந்த அறிவுக் காட்சியின் விளைவோ? அகவிலக்கியம் இலக்கிய வுலகிற்கு ஒரு தனித்தமிழ் ஞாயிறு எனவும், எண்ணம் நுண்ணிய தமிழறிவினோர் அகலக்கருதி ஆழநினைந்து படைத்தளித்த இலக்கியப் புதுக்கோள் எனவும் சொல்லி மகிழ்வோமேல், அன்ன புதுப்படைப்பினைச் செய்தற்கு உரிய நோக்கம் என்ன? அந்நோக்கம் அறவழிப்பட்டதா? தலைவன் தன் கற்புடை நல்லாளை அழவைத்துப் பரத்தை வேட்டம் நாடுகின்றான்; இந்த இல்லற வழுக்கலை ஒரு திணைப்பொருளாகக் கொண்டு அகத்திணை பாடுகின்றதே! இதுவா நோக்கம்? இதுவா அறம்? (ஈ) பாடுவார்க்கு ஏராளமான விதிகளை இம்மியும் வழுவலாகா மரபென. விதிக்கும் அகவிலக்கணம் கற்பனை யூற்றுக்குக் கல்லாகாதோ? அறிவுக் கூர்மையை மழுக்கும் அரம் ஆகாதோ? அவை யக்கால அகப் புலவர்கள் தொல்காப்பியம் கூறும் அகவிதிகளை முழுதும் பின்பற்றினர்கொல்? முரணியனவும் பெருக்கியனவும் உளவோ? இவ்வாறு அகத்திணை குறித்து ஐயவினாக்களை அடுக்கிச் சொல்லுதலோ எளிது; அறிவொக்கும் விடைத் தெளிவு காண்பது அத்துணை எளிதன்றேனும், காண முயல்வதும் முயல்விப்பதும் இவ்வாராய்ச்சியின் பாடாகும். சங்க விலக்கியமே நாம் பெற்றிருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/46&oldid=1237150" இலிருந்து மீள்விக்கப்பட்டது