பக்கம்:தமிழ்க் காதல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

தமிழ்க் காதல்


எனப் பெயர்பெறும் நூற்றுக் கணக்கான பாடல்கள் இத்துறைக்கு உள. வேறு பல துறைப் பாடல்களும் இத்துறையைச் சார்ந்துவரக் காணலாம். அயல் மணப் பேச்சால் தலைவனை இடித்துரைக்கும் பெருவாய்ப்பைத் தோழி பெறுகின்றாள். எவ்வளவோ அறைந்தும், வரைவை மனங்கொள்ளாக் களவுடை நம்பியும் இனி வரைவை முடிக்கத்தான் வேண்டும் எனக் காலம் அறிகின்றான். சிறுநணி வரைந்தனை கொண்மோ பெருநர் வலைவர் தந்த கொழுமீன் வல்சிப் பறைதபு முதுகுரு கிருக்கும் துறைகெழு தொண்டி யன்னவிவள் நலனே (ஐங். 180) தலைவ! இவள் அழகுவளம் தொண்டிப் பட்டின வளத்துக்கு ஒப்பாகும். தொண்டித்துறை எத்தகையது, அறிவாயா? செம்படவர்கள் கடலிற் பிடித்து வந்த வளமான மீனை இரையாகக் கருதிச் செவ்வி பார்த்திருக்கும் கிழநாரைகளையுடையது. ஆனால் இவள் அழகு உனக்கே சொந்தமாமாறு மணஞ் செய்துகொண்டு அழைத்துப் போய்விடு' எனத் தோழி நொதுமலர் வரைவைக் காட்டித் தலைவனை எச்சரிக்கிறாள். கிழ நாரைகள் மீன் செவ்வி பார்க்கும் குறிப்பைக் கேட்ட தலைவன் கிழவர்கள் ஒருத்தனக்குத் தன் காதலியை மணம் பேசும் காலம் பார்த்திருப்பார்கள் என்ற கருத்தை உணராத அறிவிலியாகவா இருப்பான். அறத்தொடு நிற்றல் அறம் எனப்படுவது பல பண்புகளையும் தழுவிய பொதுச் சொல்லாயினும், ஈண்டு பெண்ணுக்கு உரிய முதற் பண்பான கற்பையே குறிக்கும். கற்பென்னும் கடைப்பிடியில் நின்று களவொழுக்கத்தைப் பெற்றோருக்கு வெளிப்படுத்தல் என்பது இத்துறையின் பொருள். பெற்றோருக்கு அறிவித்தல் தோழியின் நோக்கம் இல்லை. அங்ங்ணம் அறிவிப்புழி, தலைவி ஏற்கெனவே கற்பு நெறிப்பட்டுவிட்டாள் என்பதனை முதன்மையாக வலியுறுத்துவதே அவள் நோக்கமாம். இந்நன்னோக்கம் சங்கப் புலவர்களின் நெஞ்சைப் பிணித்து ஆண்மை சான்ற பல பாடல்களை உருவாக்கியுள்ளது. வேறு வழியெல்லாம் பயனற்றுப் போனகாலை, அறத்தொடு நிற்றல் என்னும் நேர்நெறியைத் தலைவியும் தோழியும் மேற்கொள்ப நாணமும் கற்பும் ஒருவந்தம் காக்கத்தகும் இரு பேரொழுக்கங்கள். ஆயினும், குழந்தை இறப்பினும் தாய் பிழைக்க என்பதுபோல, நாண்விட்டேனும் கற்பைத் தலையாகப் போற்றியொழுக வேண்டும் என்பது தமிழ் முன்னோர் கண்ட மனையியல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/82&oldid=1238332" இலிருந்து மீள்விக்கப்பட்டது