பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தமிழ் நாடும் மொழியும்


வடமொழிச் சொற்களும் வடவர் புராணக்கதைகளும் சங்க இலக்கியத்தில் மிகக் குறைவு. ஆனால் காப்பியங்களில் அதிகம். சங்ககாலத்திலே திருமணம் பெற்றோரால் செய்துவைக்கப்படவில்லை. காதலர்கட்கு முழு உரிமை அளிக்கப்பட்டிருந்தது. பருவம் வந்த ஆணும் பெண்ணும் தத்தமக்குப் பிடித்தவரைத் தாமே கண்டு காதல் கொண்டு களவொழுக்கம் புரிந்து, அடுப்பாரும் கொடுப்பாரும் இன்றி மணம் புரிந்து இல்லறம் என்னும் நல்லற வாழ்வில் பேரின்பங்கண்டனர்.

ஆனால் காப்பிய காலத்திலே இம்முறை அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் காப்பியகாலத் தமிழ்ச்சமுதாயம் காதலை நாடவில்லை போலும். அதுமட்டுமல்ல; கோவலன் கண்ணகி திருமணத்திலே முத்தீ வளர்க்கப்பட்டது; பார்ப்பான் மறை ஓதினான்; மணமக்கள் தீவலம் செய்தனர். அஃதோடு இம்மணத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் பெற்றோர்கள். மணமக்களின் ஒப்புதல் கேட்டதாகத் தெரியவில்லை. இறுதியிலே கண்ணகி - கோவலன் மணமக்களாகிவிடுகின்றனர். பிறகு பிரிந்துவிடுகின்றனர். கோவலன் போற்றா ஒழுக்கம் புரிகின்றான். கேட்பாரில்லை; அதுமட்டுமா? கோவலனுக்கு நண்பனாகவும் அறவுரை கூறுபவனாகவும் இருப்பவன் மாடலன் என்னும் மறையோன் ஆவான். செங்குட்டுவன் போன்ற பெருஞ் செல்வ மக்களுக்கும் உயர்ந்தோருக்கும் நெருங்கிய அறவுரை கூறுகின்ற நண்பனும் அவனே.

இரு காப்பியங்களிலும் பெரிதும் பேசப்படுகின்றவர்கள் பெண்களே. இதனால் காப்பியகாலத்திலே பெண்களின் செல்வாக்கு அதிகமாயிற்றோ என எண்ண இடம் உளது. மழைக்காகக் களவேள்வி செய்து கடவுளைப் பரசல் காணப்படுன்றது. சங்ககால மன்னர்களைவிட செங்குட்டுவற்கு பிற நாட்டு மன்னர் தொடர்பு அதிகமாகக் காணப்படுகிறது.