பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

213


எட்டு வட்டம் கட்டிக் கொண்டு எதிர்ப்புறம் போனாளாம்; அவள் பத்து வட்டம் கட்டிக் கொண்டு பரக்கப் பரக்க வந்தாளாம். 4955

(வட்டம்-தையல். )

எட்டு வீடு தட்டியும் ஓச்சன் குடி பட்டினி.

எட்டே கால் லக்ஷணமே, எமனேறும் வாகனமே.

(எட்டேகால் லக்ஷணமே-அவலக்ஷணமே. எமனேறும்வாகனம்- எருமைக்கடா.)

எடக்கு நாட்டுக்குப் போனானாம் தேங்காய் வாங்க.

எடுக்கப் பிடிக்க ஆள் இருந்தால் வரப்பு ஏறிப் பேள்கிறதற்கும் கஷ்டம்.

எடுக்கப் போன சீமாட்டி இடுப்பு ஒடிந்து விழுந்தாளாம். 4960

(விழுந்தாற் போல.)

எடுக்கிறது எருத்து மட்டுச் சுமை; படுக்கிறது பஞ்சணை மெத்தை.

(எருமைச்சுமை.)

எடுக்கிறது சந்தைக் கோபாலம்; ஏறுகிறது தந்தப் பல்லக்கா?

(கோபாலம்-பிச்சை.)

எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு.

(முட்டி, பல்லக்கா. )

எடுக்கிறது வறட்டிச் சுமை; நடக்கிறது தங்கச் சிமிழ்ப் பாதரட்சை.

எடுக்கு முன்னே கழுதை இடுப்பு ஒடிந்து விழுந்ததாம். 4965

எடுத்த அடி மடங்குமா?

எடுத்த கால் வைப்பதற்குள் வைத்த கால் செல் அரிக்கிறது.

எடுத்த கை சிவக்கும்.

எடுத்த சுமை சுமத்தல்லவோ இறக்க வேண்டும்?

எடுத்தாலும் பங்காருப் பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்காரக் கழுவில் இருக்க வேண்டும். 4970

எடுத்தாலும் பெயர் சரியாய் எடுக்க வேணும்.

எடுத்தாற் போல் தப்பட்டைக்காரன் பட்டான்.

(செத்தான்.)

எடுத்து ஆளாத பொருள் உதவாது.

எடுத்து எடுத்து உழுதாலும் எருதாகுமா கடா.

(எருது மாடு ஆகாது.)