பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

தமிழ்மொழி-இலக்கிய வரலாறு


போன்றது (146). சோழர் அறம் கெடாது நீதி வழங்கு பவர் (400). போர்க்களத்தில் களம் பாடுவாரும் இசைக் கருவியை இசைப்பவர்களும் கூடி இருந்து வெற்றி பெற்ற அரசனை வாழ்த்துவது வழக்கம் (113).

குறிஞ்சிநில ஊர்களில் ஊர்க்காவல் இருந்தது. காவலர் குறிஞ்சி என்னும் பண்ணைப் பாடிக்கொண்டு இரவு முழுமையும் தூங்காமல் ஊரைக் காவல் காத்தனர் (255), நெய்தல் நில ஊர்களிலும் காவலர் யாமந்தோறும் மணியடித்து ஓசை யெழுப்பி, “தலைக்கடை புழைக்கடை வாயில்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்,” என்று கூறிச்சென்றனர் (132).

தகுதி உடையவர் பெயரையும் அவர் வாழும் ஊரையும் ஏட்டில் வரைந்து ஊர்ப்பொது மன்றத்தில் வைத்திருப்பது வழக்கம் (365).

ஆயன் : ஆயன் முல்லை மலரை இரவிலே கொய்து பனங்குருத்தின் போழுடன்ே சேர்த்து மாலையாகத் தொடுத்து அணிவான் (169) . அவன் பலவாகிய காலிட்டுப் பின்னிய மெல்லிய உறியுடனே, தீக்கடை கோல் முதலிய கருவிகளை இட்டு வைத்த தோல் பையைச் சுருக்கிக் கட்டிப் பனையோலைப்பாயோடு முதுகிற் கட்டியிருப்பான்; பால் விலை கூறி விற்பான்; கையில் கோலூன்றி இருப்பான்; அக் கோல்மீது ஒரு காலை வைத்து ஒடுங்கிய நிலையில் நிற்பான்; வாயைக் குவித்து ‘வீளை’ எனப்படும் அழைத்தலாகிய குறியை எழுப்புவான். அது கேட்ட ஆடுகள் பிறநிலம் புகாமல் நிற்கும் (142). ஆயர் தயிர்த்தாழியின் முடை நாற்றம் நீங்க விளம்பழம் இட்டு வைப்பர் (12).

பரதவர் வீடுகள் பனையோலைகளாலும் இலைகளாலும் தழைகளாலும் வேயப்படும். பனை ஓலைகளோடு முட்களைச் சேர்த்துக் கட்டப்பட்ட வேலி ஊரைச் சூழ்ந்து இருக்கும் (38). பரதவர் திமிங்கிலத்தையும் வேட்டையாடுவர்: மீன்களைப் பிடித்து விடியற்காலையில் கொண்டு வருவர் புன்னைமர நிழலில் இருந்து தேன் மணம் வீசும்