பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228 தமிழ் மொழி—இலக்கிய வரலாறு


நந்தர்களைப் பற்றிய செய்தியும் மோரியர் படையெடுப்பைப் பற்றிய குறிப்புகளும் இந்திய வரலாற்றுச் சிறப்புடைய செய்திகளாகும். சங்க காலப் புலவர்கள் இச் செய்திகளை எந்த அளவு அறிந்திருந்தனர் என்பதை அகநானூற்றுப் பாடல்கள் அழகுற அறிவிக்கின்றன.

பேரரசர் : அகநானூற்றுப் பாடல்கள் அகப்பொருள் பற்றியவையாயினும், அவற்றுள் தமிழ்ப் பேரரசர் சிற்றரசர் பற்றிய செய்திகளும் பிறவும் உவமைகளாகவும் பிறவாகவும் கூறப்பட்டுள்ளன. இச் செய்திகள் தமிழக வரலாற்றிற்குப் பெருந்துணை செய்வனவாகும். இங்ஙனம் வரலாற்றுச் செய்திகளை எடுத்துக் கூறும் அகப்பொருள் நூல்களுள் அக நானூறு தலை சிறந்தது.

சேர வேந்தருள் உதியன் சேரல் (65), சேரலாதன் (127) , மாந்தரம் பொறையன் கடுங்கோ (142), உதியன் (168), கோதை மார்பன் (346) என்பவர் பெயர்களால் சுட்டப்பட்டுள்ளனர். பிறர் குட்டுவன் (91,296), வானவன் (309), வானவரம்பன் (389) எனச் சேரர்க்குரிய பொதுப் பெயர்களால் குறிக்கப்பட்டுள்ளனர். சோழருள் தித்தன் (6), கரிகாலன் (141), கிள்ளி வளவன் (346) பேசப்பட்டுள்ளனர். பலவிடங்களில் சோழர் என்றே பொதுப்படையாகக் குறிக்கப் பட்டுள்ளனர். பாண்டியருள் ஆலங்கானத்துச் செழியன் (36) , பசும்பூண் பாண்டியன் (162), பழையன் மாறன் (346) என்பவர் இடம் பெற்றுள்ளனர். பிற பாண்டியர் வழுதி (312) , செழியன் (335), கவுரியர் (342) , தென்னவன் (342) எனப் பாண்டியர்க்குரிய பொதுப் பெயர்களால் குறிக்கப் பெற்றுள்ளனர். தொண்டை நாட்டை ஆண்ட திரையன் (85) பொதுப் பெயரால் குறிக்கப் பெற்றுள்ளான்.

சிற்றரசர் : வேள் ஆவி (1), மத்தி (6), கோடைப் பொருநன் (18), காரி (35), திதியன், எழிநி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் (36), நன்னன்,