பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கம்

243

காணப்பெறாத இவ்வடநாட்டுச் செய்தி சங்க காலத்தின் இறுதியில் அல்லது பிற்பட்ட காலத்தில் தமிழகத்தாரால் அறியப்பட்டதாதல் வேண்டும்.

4. குறிஞ்சிக் கலியுள் ஐந்திணை பற்றிக் கூறற்குரிய அரிய செய்திகளை, ஏனைச் சான்றோரைப் பின்பற்றிக் கூறுதலை ஒழித்து அவரால் கனவிலும் கருதப்படாதவையும் சொல்லப்படாதவையுமான கைக்கிளை பெருந்திணைச் செய்திகளையும், இழிந்தோர் களவினையும், மருதக்கலியுள் கூனும் குறளும் உறழ்ந்து கூறலும் புணர்தல் (29) போன்ற செய்திகளையும், “தேள் கொட்டி ஏறும் விஷம் போலக் காமம் தலைக்கேறுகிறதோ?” என்றாற்போலக் கூறப்படும் முல்லைக்கலிச் செய்திகளையும், இவைபோன்றே ஏனைய கலிகளிலும் வெறுக்கத்தக்க–பண்டைப் புலவர் நெறிக்கு மாறாகக் கூறப்படும் அச்சங்ககாலப் புலவரோடு இருந்த சான்றோர் பாடியிரார் என்பது அறிவும் நடுவு நிலைமையும் உடையார் நன்கறிதல் கூடுமன்றோ? இவற்றுக்கு இலக்கணம் தொல்காப்பியத்துள் காணப்படினும், இவற்றைப் பிற்காலத்துப் புலவர் பாடினர் எனக் கோடலே அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமாகத் தெரிகிறது. அறிஞர் மேலும் ஆய்வாராக.

5. காமன் ஆரியக்கடவுள். அவன், ‘காமனார்’ எனவும், ‘சாமனார்க்கு மூத்த காமனார்’ எனவும் மருதக் கலியுள் (29] கூறப்பட்டாற் போலப் பிற தொகை நூல்களுட் கூறப்பட்டிலன்.

6. கலித்தொகை முழுமையிலும் எந்த அரசன் பெயரும் சுட்டப்படவில்லை. மூவேந்தருள் பாண்டியனே சுட்டப்படுகின்றான். வையை, கூடல் இவையே சுட்டப்படுகின்றன. ஏனைய தொகை நூல்களிற் கூறப்படும் வள்ளல்களோ புலவர்களோ சுட்டப்படவில்லை. மேற்கோள் காட்டத்தகும் இடங்களில் ‘வாரணவாசிப் பதம்’ போன்ற வட நாட்டுச் செய்திகளும், உவமைகள் கூறப்பட்டுள்ள இடங்கள்