பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.மா.இராசமாணிக்கனார்

285


பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பாலைக் கெளதமனார் என்ற அந்தணப் புலவர் பொருட்டுப் பெரும்பொருள் செலவிட்டுப் பத்துப் பெருவேள்விகளை வேட்பித்தான் என்று அவனைப் பற்றிய பதிகம் கூறுகின்றது. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் வேதியர்க்குப் பசுக்களோடு குட நாட்டு ஒர் ஊரும் வழங்கினான்.

இங்ங்ணம் சேர வேந்தர் வேள்விகள் செய்தனர்; கொற்றவை வழிபாட்டிலும் திருமால் வழிபாட்டிலும் பங்கு கொண்டனர்; முனிவர்களுக்குக் காடுகளில் இருக்க வசதிகளைச் செய்து தந்தனர்; வேள்வி அந்தணர்க்குப் பணிந்து நடந்தனர். இச் செய்திகள் அனைத்தும் சேர நாட்டில் வேத நெறி தழைத்து ஓங்கிய உண்மையை உணர்த்துவனவாகும்.

நகரங்கள் : நறவு என்பது சேர நாட்டுச் சிறப்புடைய நகரங்களுள் ஒன்று (60). தொண்டி என்பது சேர நாட்டுத் துறைமுகப் பட்டினம். யவன யாத்திரிகர் அதனைத் துண்டிஸ் என்று குறித்துள்ளனர். கொடுமணம் என்பது ஒரு நகரம். அது வேலைப்பாடு மிகுந்த நகைகட்குப் பெயர் பெற்றது (74). பக்தர் என்பதும் ஒரு நகரம். அது பாண்டிய நாட்டுக் கொற்கையைப் போல முத்துகளுக்குப் பெயர் பெற்றது (67, 74). மரந்தை என்பது மற்றொரு நகரம்.

வருணனை : ஒவியம் வரையத்தக்க முறையில் அமைந்த வருணனைப் பகுதிகள் இந்நூற் பாக்களில் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன. அவற்றுள் மருத வளம் (27), மலைவளம் (12), பிற நாடுகளின் வளம் (13, 23) பூமி நாட்டு வளம் (21) , நானிலச் சிறப்பு (30) , பாலை வழி (41), பாடினியர் சிறப்பு (46) , கடலின் தோற்றமும் கடற்கரையின் தோற்றமும் (51), மாரியின் சிறப்பு (61), சோழ நாட்டுச் சிறப்பு (73), தகடுர் நாட்டுச் சிறப்பு (78), இளஞ்சேரல் இரும் பொறையின் நாட்டு வளம் (89) என்பவை குறிக்கத் தக்கவை.