உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

கூறுகின்றனர். எப்படியோ, இற்றைக்கு ஐந்நூறு ஆண்டுகட்கு முன்பே இத்தகைய அகராதி முறையுணர்வு நம்மவர்க்குத் தோன்றி விட்டது என்பது வரைக்கும் உறுதி.

சூடாமணி நிகண்டில், மண்டல புருடர் கையாண்ட எதுகை, முறையைப் பின் வந்த நிகண்டு ஆசிரியர்கள் சிலரும் பின்பற்றினர். இருப்பினும், இந்த எதுகை முறையை முழு அகராதி முறையாகக் கொள்ள முடியாது. எதுகை முறையில் சொற்களின் இரண்டாவது எழுத்து மட்டும் கவனிக்கப்பட்டதே தவிர, முதலெழுத்து அகராதி முறையில் கவனிக்கப்படவில்லை. ‘த’ என்பதை இரண்டாவது எழுத்தாகக் கொண்டுள்ள ‘முதலை’ என்னும் சொல்லைத் தேட வேண்டுமானால், மற்ற எதுகைப் பகுதிகட்குச் செல்லாமல், நேரே ‘தகர எதுகை’ப் பகுதிக்குச் செல்வதற்கு மட்டுந்தான் சூடாமணியில் வசதியுண்டு; தகர எதுகைப் பகுதியில், தகர எதுகைச் சொற்கள் பல உள்ளன; அவையெல்லாம் முதலெழுத்து வாரியாக, அகர வரிசையில் அமைக்கப்படாமல் முன்னும், பின்னுமாகக் கண்டபடி அமைக்கப்பட்டுள்ளன; எனவே, எல்லாச் சொற்களையும் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு முறை படித்துப் பார்த்துக் கொண்டு வந்தால்தான், எங்கேயோ ஓரிடத்தில் ‘முதலை’ என்னும் சொல் தட்டுப்படும். இதனால் காலமும் முயற்சியும் வீணே.

முதல் அகராதி :

எனவே, சொற்களை முதலெழுத்து வாரியாக அகர வரிசையில் அமைக்க வேண்டுமென்ற உணர்வு அரும்பலாயிற்று. இதனைப் பதினாறாம் நூற்றாண்டின்