பக்கம்:தமிழ் அமுதம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாகங்கள் என்பன குறிப்பிடத்தக்கவை. இவை இவருடைய நுணுகிய ஆராய்ச்சித் திறனை நன்கு விளக்க வல்லவை.

உரையாசிரியர்

சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரை முடிவுற்றதாக இல்லை. அக் குறையை நீக்க விழைந்த நாட்டார், சிலப்பதிகாரம் முழுமைக்கும் சிறந்த முறையில் தெளிவுரை எழுதி வெளியிட்டார். இவ்வாறே அகநானூற்றுக்கும், கரந்தைக் கவியரசு அவர்களுடன் சேர்ந்து நல்ல உரையை வெளியிட்டார் ; மணிமேகலைக்கும் ஆழ்ந்து அகன்ற உரையை வெளியிட்டார். இவ்வுரை எழுதுவதில் இவருக்கு உதவியாக இருந்தவர் பேராசிரியர் ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள். நாட்டார் எழுதிய திரு விளையாடற் புராணவுரை படித்துப் படித்து இன்புறத்தக்கது. இவ்வாறு இப்பெரும் புலவர் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சிலவற்றுக்கும் உரை எழுதியுள்ளார். இவரது உரை இவருடைய ஆழ்ந்த கல்வி அறிவையும் ஆராய்ச்சித் திறனையும் நன்கு புலப்படுத்துகின்றது.

பேராசிரியர்

பேராசிரியர் நாட்டார் செய்யுட்களை இசையுடன் பாடிப் பொருள் விரிப்பதில் சிறந்தவர். அவருடைய வகுப்பில் மாணவர் அமைதியாக இருந்து பாடம் கேட்பது வழக்கம். டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார் போன்ற தமிழ்ப் பேராசிரியர் பலரும், கல்லூரித்தலைவர் பலரும், அரசாங்க உயர் அலுவலர் பலரும் தாம் நாட்டார் மாணவர் என்று கூறுவதில் பெருமைப்படுகின்றனர் என்றால், இப்புலவர் பெருமானது புலமைத் திறனை என்னென்று பாராட்டுவது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/17&oldid=1459121" இலிருந்து மீள்விக்கப்பட்டது