பக்கம்:தமிழ் இனம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

தமிழ் இனம்

கௌதம முனிவன் ஐம்புலனடக்கம் உடையவன் என்றும், அதனால் ஐம்புலனடக்கம் இல்லாத இந்திரன் புலனடக்கமுடைய கௌதமனால் சபிக்கப்பட்டான் என்றும் பரிமேலழகர் கருதி, இவ்விளக்கம் தந்துள்ளார். உண்மையில் கௌதமன் ஐந்தவித்தவனா?

“கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே யுள”

என்பது குறள். இங்ஙனம் ஐம்புலனுகர்ச்சிக்கும் நிலைக்களனாக உள்ள அகலிகையோடு இல்லற வாழ்க்கை நடத்திவந்த கௌதமன் ‘ஐந்தவித்தான்’ என்று கூறுதல் எங்ஙனம் பொருந்தும்? நூலறிவும் நுண்ணறிவும் உடையவர் இதனை ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும். எனவே, கௌதமனையும் அவனால் சபிக்கப்பட்ட இந்திரனையும் உளம் கொண்டு இக்குறள் உண்டாகியிருத்தல் இயலாது. பரிமேலழகர் இராமாயணத்துள் கூறப்படும் அகலிகை வரலாற்றை நினைவிற்கொண்டு இவ் விளக்கம் தந்தனரேயன்றி, இக்குறட்பொருளை ஆழ்ந்து சிந்தித்தனர் என்பது இவ்விளக்கத்தால் தெரியவில்லை.

இந்திரன் கரியாதல் எங்ஙனம்?

இக்குறளுக்கு மணக்குடவர், “இந்திரன் சான்று என்றது, இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வார் உளரானால், அவன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியன் என்றவாறு,” என்று விளக்கம் தந்துள்ளார். நிலவுலகில் ஐந்தவித்த பெரியோன் தோன்றுவானாகில், இந்திரன் இருக்கைமீதுள்ள பாண்டு கம்பளம் அசை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/29&oldid=1356751" இலிருந்து மீள்விக்கப்பட்டது