பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

தமிழ் இலக்கியக் கதைகள்

தொடுத்திருக்கும் சாதுரியத்தை இவைகளிலே காண முடியும். தெய்வீகமான முறையில் கவிதை உணர்ச்சியை உண்டாக்கும் ஆற்றல் இவைகளுக்கு இல்லையே என்று பலர் குறைபட்டுக் கொள்வர். ஆயினும் மொழியிலுள்ள வார்த்தைகளின் பல வேறு பொருள்களையும் துண்மையான அமைப்பையும் அறிந்து கொள்ளத் துணை செய்வதில் இவைகளுக்கு ஈடு இணை கிடையாது. அப்படிப் பயன்படும் முறையில் இவைகளுக்கும் நம் கவனத்தில் இடமளித்து அனுபவிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது

‘வினா உத்தரம் என்பதற்குக் ‘கேள்வி பதில்’ என்று பொருள். இத்துறையில் பாடப்படும் பாடல்கள் கேள்வியையும் அதற்கு விடையையும் உட்கொண்டவைகளாக இருக்கும். கேள்விகளுக்கு வார்த்தைகளை விடையாக வகுத்திருக்கும் விதம் அழகு மிகுந்து விளங்கும். மாதிரிக்குத் திருவேங்கடநாத முதலியார் என்பவர் மேல் இராமச்சந்திர கவிராயர் பாடிய பாட்டு ஒன்றை இங்கே சந்தர்ப்பத்தோடு காண்போம்.

திருவேங்கடநாத முதலியார் பெருஞ்செல்வர். தமிழுக்கு இளகும் மலர் உள்ளம் கொண்டவர். தமிழ் படித்தவருக்கு உதவத் தயங்காத கற்பகக் கைகளைப் பெற்றவர். எனவே, தமிழ்ப் புலவர்கள் அவரை நாடித் தேடிச் சென்றது வியப்புக்கு உரிய செய்தி இல்லை. வருபவர்களை அன்போடு அளவளாவிக் குறைகளையும் வேண்டியவற்றையும் விசாரித்து உதுவுவார் அந்த வள்ளல்.

அவரை நாடி இராமச்சந்திர கவிராயரும் ஒருமுறை சென்றிருந்தார். வள்ளல்களுக்குக் கொடுக்கவேண்டும் என்ற ஆசை இருப்பதைப் போலப் புலவர்களுக்குத் தம் சொந்த சாமர்த்தியத்தைக் காட்டவேண்டுமென்ற ஆசை இருக்கத்தானே இருக்கும்? துன்ப்த்தை மற்றவர்களிடம் கூறிக் கேட்கும் போது கூட, அதைத் தம் திறமையைக் காட்டும் வார்த்தைகளால் அவர் கேட்கவே விரும்புகின்றார்கள்.