பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
191
 

லிருந்து ஏதோ வம்புக்குத்தான் வந்திருக்கிறார்கள் என்பது காளமேகப் புலவருக்கும் புரிந்துவிட்டது. அவரால் எந்த வம்பையும் சமாளிக்க முடியும். எனவே அவர் அஞ்சாமல் தில்லை மூவாயிரவர்களை நிமிர்ந்து பார்த்தார்.அவர்கள் சொன்னார்கள்:

"காளமேகப் புலவரே! உங்களை நாங்கள் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.”

"கேளுங்கள். நான் எந்தக் கேள்விக்கும் எப்போதும் தயார்”

"இப்போது நீங்கள் வழிபட்டுக் கொண்டிருக்கும் நடராசப் பெருமானின் கரத்தில் உள்ள மான், பெருமானின் திருமுகத்துக்கு நேரே பாய்வதுபோல் கால்களைப் பாய்ச்சிக் கொண்டு நிற்பதற்குக் காரணம் என்ன?”

மகா ஞானிகளாகிய தில்லை மூவாயிரவர் தங்களுக்குக் காரணம் தெரியாததனால் இதைக் கேட்கவில்லை. தன்னிடம் ஏதாவது குறும்பு செய்ய வேண்டுமென்பதற்காகவே கேட்கிறார்கள் என்பது காளமேகத்துக்குத் தெரிந்து விட்டது. குறும்பைக் குறும்பாலேதான் வெல்ல வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டு பதில் கூறலானார். . .

"கூத்தப் பெருமானுடைய சடையில் மானுக்கு மிகவும் பிரியமான அறுகம்புல் ஆரத்தைப் பக்தர்கள் சாத்தியிருக்கிறார்கள். குடிப்பதற்கு இனிய கங்கையின் தெள்ளிய நீர் பாய்கிறது. அதனால்தான் மான் அங்கே பாய்வதுபோல் தோற்றுகிறது.”

காளமேகப் புலவர் ஒரு வெண்பாவாகவே விடையைக் கூறினார்.

"பொன்னஞ் சடைஅறுகம் புல்லுக்கும் பூம்புனற்கும்
தன்நெஞ்(சு) உவகையுறத் தாவுமே - அன்னங்கள்
செய்க்கமலத் துற்றுலவும் தில்லை நடராசன்
கைக்கமலத் துற்றமான் கன்று"