பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உதிரிப் பூக்கள்
முன்னுரை

சரமாகத் தொடுக்கும் பூக்களைவிட ஆரமாக அணியும் பூக்களை விட, மாலையாக அணியும் மலர்களைவிடப் புதுமை நலங்குன்றாமல் உதிர்ந்த உதிரிப் பூக்களை அப்படியே திரட்டி நுகர்வது சுவையான அனுபவத்தைத் தரக் கூடியது. உதிரிப் பூக்களின் பலம் அவை உதிரியாக இருப்பதுதான். உதிரியாகவும் தனித்தனியாகவும் இருப்பதே ஒரு வகையில் அவற்றின் சிறப்பு.

தமிழ் இலக்கிய வரலாற்றில் புறநானூறு போன்ற தொகை நூல்களில் உள்ள பாடல்களே உதிரிப் பூக்கள்தான். அவற்றைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும்தான் பின்னாட்களில் ஒரு தொகுதியாக்கினார்கள். ‘புறம்’ என்னும் ஒரு பொருள் தொடர்பில் அவை தொகுக்கப்பட்டதுபோல் பொருள் தொடர்பு இல்லாத பல உதிரிப் பாடல்கள் பிற்காலத்துத் தனிப்பாடல் திரட்டிலும் பெருந்தொகையிலும் உள்ளன. இந்நூல்களில் பல பாடல்கள் அதுபவத்தின் விளைவுகள்.

பாடியவர்களின் அனுபவங்கள், பாடியவர்களோடு பழகியவர்களின் அனுபவங்கள், உலக அனுபவங்கள், கண்டவை, கேட்டவை; இரசித்தவை எல்லாம் இந்நூல்களில் கவிதைகளாகி இருக்கின்றன. இவற்றில் ஒரு சில சிலேடைப் பாடல்கள்தான் திரும்பத் திரும்பப் பள்ளி மாணவர்களுக்குப் பாடங்களாக வருகின்றன. ஆசிரியர்கள் பதவுரை, பொழிப்புரை, இலக்கணக் குறிப்புக்களோடு மாணவர்களுக்கு அவற்றை நடத்தி விடுகிறார்கள்.

ஆனால் அந்தக் கவிதைக் களஞ்சியத்தின் செல்வங்களில் அதன் பெருமையை அடையாளம் காட்டுவனவற்றை முழுமையாக மாணவர்கள் இரசிக்க முடிவதில்லை. அப்படி அடையாளம் காட்டும் பாடல்களாகத் தொகுக்கப்பட்டுக் கதைகளைப் போன்று சொல்லும் முறையோடு இங்கு விளக்கப்பட்டிருக்கின்றன.