பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19. ஒரு வாயும் நால் வாயும்

சாதுரியமாக மற்றவர்களைப் புகழ்வதும் ஒரு கலையைப் போன்றது. அது நூல் ஏணியில் ஆற்று வெள்ளத்தைக் கடப்பது போன்ற கடினமான வேலை. அதைப் பிழைபடாமல் செய்வதற்கு உயரிய கலைத்திறன் வேண்டும். ஒருவரைப் பழிப்பது போலவும் புகழலாம், புகழ்வது போலவும் பழிக்கலாம். ஆனால் இரண்டுமே வரையறை பிறழாத பொருளமைப்பும் அதைச் சொல்லும் விதமும் அமையப் பெற்றவையாக இருக்கவேண்டும். தனிப்பாடல்களில் மன்னர்களையும் வள்ளல்களையும் பிறரையும் புகழ்ந்து பாடப்பெற்ற பாடல்கள் அத்தகைய அமைப்பு குன்றாத பொருள்திறன் பெற்று விளங்குகின்றன.

இலங்கை அரசன் பரராசசிங்கன் வள்ளல். கொடுக்கத் தயங்கி அறியாத கொடைஞன். பாடி வந்தாலும் சரி, எந்தவிதத் திறமையுமின்றிக் கை நீட்டியே வாழ்வோராயினும் சரிகொடுத்து மகிழ்கின்றவன். தன்னுடைய பொருளைப் பிறர்க்குக் கொடுத்து அதை அவர்கள் நுகர்கின்றபோது தானும் கண்டு மகிழும் அனுபவம் இன்பம் மிக்கது. செல்வர்களாக இருந்தாலும் எல்லோருக்கும் அந்த அனுபவத்தின் மேன்மை தெரிவதில்லை. அதில் கிடைக்கும் இன்பத்தில் தியாகமும் திருப்தியும் கலந்த ஒரு வகையான மனச்சந்துஷ்டி உண்டு. அதை அறிந்து தெளிந்தவன் பரராசசிங்கன்.

தமிழ்க் கவி வீரராகவருக்கு இவனைக் கண்டு பாடி வேண்டுவன பெற்று வரவேண்டு மென்ற ஆசை இருந்தது. பரராசசிங்கன் கொடுக்கும் கொடையால் வாழ்க்கை வறுமையைப் போக்கிக் கொள்ளலாம் என்று கருதிச் சென்றார். எதிர்பார்த்தது போலவே மனம் மகிழ வரவேற்று, உபசரித்தான். மதுரமயமான பாடல்களைக் கேட்டுச் சுவைத்தான். நாடாளும் அரசன் பாடல்களை அனுபவிக்கும்போது கவிதை மன்னராகிய வீரராகவருக்கு அடியாள்போல நடந்து கொண்டது அவருக்கே வியப்பளித்தது. இரசிகன் கவிக்கு முன்னால் குழந்தையுள்ளம் பெற்று ஈடுபாடு கொண்டால்தான் சுவையுணர்ந்து கவிதைகளை