பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

தமிழ் இலக்கியக் கதைகள்

வேங்கடசாமியையும், மாறி மாறிப் பார்த்தவாறே ஏதோ ஒரு வேடிக்கையான கற்பனைக்கு ஒப்பிடத் தொடங்கிவிட்டார் கவிராயர்.

மூன்று கண்களையுடைய சாமியான சிவபெருமானோ மூங்கிற் புதருக்குள்ளே போய் ஒளிந்துகொண்டார். உயிர்களை எல்லாம் பாதுகாக்கும் தொழிலையுடைய திருமாலான சாமியோ பேசாமற் கொள்ளாமல் பாற்கடலில் போய்த் தூங்கத் தொடங்கி விட்டார்.வேலையெனக் கொண்டு உயிர்களை எல்லாம் படைத்த பிரமனோ தாமரைப் பூவிலேறி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். சரி. இவர்கள்தான் போகிறார்கள் என்றால் இந்த முருகனுக்கு என்ன கேடு வந்தது? அவனும் வேலைப் பிடித்துக்கொண்டு மலைமேலேறி நிற்கிறான் பாவம் அப்பாவிப் பிள்ளையாரோ அப்பம், பொரி, அவல், கனிகளைக் கொடுப்பவர்களிடம் வாங்கியுண்ண ஆசைப்பட்டதனால் வழியிலுள்ள ஓர் அரச மரத்தின் நிழல் பாழாகாமல் உட்கார்ந்து கொண்டார். “கடைசியில் நம்மைப்போலப் பாடித்திரியும் புலவர்களுக்கு மனம் நோகாமல் உதவி செய்கின்ற சாமி யார் என்று பார்த்தால் எஞ்சுவது இதோ அந்தச் சாமிகளுக்கெல்லாம் பூசை செய்து கொண்டிருக்கும் இந்த வள்ளல் வேங்கடசாமிதான். இவனைப் பெற்ற தகப்பனாராகிய பொன்னப்ப சாமியைத்தான் நம் போன்ற தமிழ்ப் புலவர்கள் வாயார வாழ்த்திப் புகழவேண்டும்” தாம் பூஜையறையில் கண்ட படங்களோடு வேடிக்கையாக வேங்கட சாமியை ஒப்பிட்டுப் பார்த்த புலவரின் மேற்கண்ட சிந்தனைச் சிப்பியில் ஒரு தனிப் பாடல் முத்து விளைந்து ஒளி வீசிடலாயிற்று.


மூங்கிலிலே ஒளிந்திருந்தான் முக்கண் சாமி
முதியகடற் போய்ப்படுத்தான் முகுந்த சாமி
தாங்கமலப் பொகுட்டுறைத்தான் தலைநாற் சாமி
தடைவரையில் உழன்று நின்றான் தகப்பன் சாமி