பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
93
 

"அதற்கு என்ன? அப்படியே செய்து விட்டால் போயிற்று” என்று கூறிவிட்டுக் கூத்தரையும் புகழேந்தியையும் அவன் பார்த்தான். கூத்தரைப் பற்றி நன்கு கேள்விப்பட்டு அறிந்து கொண்டிருந்த புகழேந்தி அவர் தம்மை வீணாக வம்புக்கு இழுக்கிறார் என்று எண்ணிக் கொண்டார். பின்னிரண்டு அடிகளைப் பாடிப் பொருத்தமாகப் பாடலை முடித்துக் காட்ட வேண்டுமே என்பதற்காகவோ, கூத்தரின் வேறு நிபந்தனைகளுக்காகவோ அவர் சிறிதும் அஞ்சவில்லை. ஆனால் தேவையில்லாத நேரத்தில் அநாவசியமாக, இந்தப் போட்டியைத் தன் சொந்தப் பொறாமையைத் தீர்த்துக் கொள்வதற்காக இந்த மனிதர் ஏற்படுத்திச் சொற் போருக்குக் கூப்பிடுகின்றாரே என்றுதான் வருந்தினார்.

கூத்தர் கூறியபடியே செய்யவேண்டும் என்று சோழன் மிகவும் ஆவலோடு கேட்டுக் கொண்டபோது புகழேந்தியால் அதை மறுக்க முடியவில்லை. சூது வாது தெரியாத அரசன். கூத்தரின் அந்த விண்ணப்பம் விளையாட்டாக, பொழுதுபோகப் பாடுவதற்கே என அவர் கூறியபடியே இருக்கும் என்று நம்பினான். கூத்தனாரின் பொறாமை உள்ளம் அவனுக்குப் புலப்படவில்லை.

சோழன்,'பாட ஆரம்பிக்கலாமே!’ என்னும் குறிப்புத் தோன்ற ஒட்டக்கூத்தரைப் பார்த்தான். கூத்தர் படுத்துக் கிடக்கும் மதயானை ஒன்று எழுந்திருப்பது போலத் தம் இருக்கையில் இருந்து எழுந்தார். தேவைக்கு அதிகமான கர்வமும் கம்பீரமும் அவரிடம் தோன்றின. அவ்வளவில் நிபந்தனைப்படி பாடலின் முதல் இரண்டு அடிகளைக் கூத்தர் பாடலானார். அவையில் பூரண அமைதி நிலவியது.

“வென்றி வள்வன் விறல்வேந்தர் தம்பிரான்

என்றும் முதுகுக் கிடான்கவம் -”

வென்றி = வெற்றி, வளவன் = சோழன், விறல் வேந்தர்= திறமைமிக்க அரசர், பிரான் = தலைவன். -