பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலம்

153


களத்தூரிலே பிறந்தார். இந்நூல் எழுத்து, சொல் என்னும் இரண்டு இலக்கணங்களையும் தொண்ணூற்றாறு நூற்பாக்களிற் சுருங்கக் கூறுகிறது. எனவே இந்நூலுக்குச் 'சின்னூல்' என்னும் பெயரும் உண்டு.

வச்சணந்திமாலை

இந்நூலும் குணவீர பண்டிதராலே இயற்றப்பட்டதாகும். 'வச்சணந்தி' என்பது குணவீர பண்டிதரின் ஆசிரியர் பெயர். வெண்பாப் பாட்டியல் என்னும் பெயரும் இந்நூலுக்கு வழங்குகிறது. பாட்டியல் மரபை- இலக்கணத்தை - வெண்பாக்களில் அமைத்துக் கூறுவதனால் இந்நூலுக்கு இப்பெயர் ஏற்பட்டது. மூன்றாம் குலோத்துங்க மன்னன் காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் இந்நூல், இந்திர காளியத்தைப் பின்பற்றியது என்பர்.

வீரசோழியம்

பெளத்த சமயச் சார்பினரான புத்திமித்தரர் இந்நூலின் ஆசிரியர். புத்தபிரானிடம் பத்தி கொண்ட இவர், பொன்பற்றி என்னும் ஊரினர் என்பதை நூற்பாயிரத்தால் அறிகிறோம். இந்நூல் எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி என்னும் தமிழின் ஐந்திலக்கணத்தையும் சுருக்கமாக உணர்த்தும் இலக்கண நூலாகும். முன்னோர் நூல்களிற் கண்ட செய்திகளைச் சுருக்கி, வடநூன் மரபைச் சிறிது ஒட்டி இந்நூல் செய்யப்பட்டிருக்கிறது. இந்நூலாசிரியர் தம்மை ஆதரித்த வீர சோழ மன்னன் பெயரையே நூலுக்கு இட்டுள்ளது இவருடைய நன்றியுணர்ச்சியைப் புலப்படுத்தும். இம் மன்னன் ஆட்சிக்காலம் 1078 முதல் 1088 வரை என்று வரலாற்றால் அறிகிறோம்.

நன்னூல்

'பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே'