பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

தமிழ் இலக்கிய வரலாறு


கம்பராமாயணம்

தமிழ்க் காவிய உலகிலே தனக்கெனத் தனித்ததொரு சிறப்பினைப் பெற்ற நூலாய் இந்நூல் திகழ்கிறது. மேலை நாட்டு இலியது (Iliad) என்னும் காவியத்திற்கு ஒப்பான சிறந்த காப்பியமாய் - தமிழின் தலைசிறந்த காப்பியமாய் - இது விளங்குகிறது. உலக மகா காவியங்களின் முன்வரிசையில் நிற்கும் கீர்த்தியினைப் பெற்றுள்ளது. வால்மீகி ராமாயணம் இந்திய மொழிகள் பலவற்றிலும் இராம காதையாய் மலர்ந்துள்ளது. அம்முறையில் கம்பரால் தமிழில் செய்யப்பட்ட நூல் கம்பராமாயணமாகும். முதன் நூலாம் வால்மீகி ராமாயணத்தைக்காட்டிலும் கம்பராமாயணம் பலவகையில் சிறப்புடையது என வ.வே.சு. ஐயர் குறிப்பிடுகிறார்.[1] மறைத்திரு.பவர் அவர்கள், வால்மீகி, கம்பர் ஆகிய இருவர்தம் இராமாயணத்தையும் தாம் படித்திருப்பதாகவும், இருவரில் யாருக்குச் சிறப்பிடம் தருவது என்ற முறையில் தம்மால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை என்றும் கூறுகின்றார். கம்பராமாயணம் காவியக் கட்டுக்கோப்பிலே சிறந்து விளங்குகிறது. பாத்திரப் படைப்பிலும், நாடக அமைப்பிலும், உரையாடல் திறனிலும் தனக்கே உரிய தனித்தன்மை பெற்று இந்நூல் விளங்குவதால், 'கம்ப நாடகம்' என்னும் பெயரும் பெற்றுள்ளது. கம்பராமாயணத்தின் கதை, பட்டிதொட்டிகளில் எளிய பாமரர்களும் அறிந்த தொன்றாகும். கம்பராமாயணப் பிரசங்கிகள் என்றே தமிழ் நாட்டில் பலர் இராமகாதையைப் பரப்பினர். 'இராமாவதாரம்' என்றே கம்பர் தம் நூலிற்குப் பெயர்


  1. "In the Ramayana of Kamban the world possesses an epic which can challenge comparison not merely with the Iliad and the Aenoid, the Paradise Lost and the Mahabarata, but wifth its orginal itself, namely the Ramayana of Valmiki."

    - V. V. S. Aivar