பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயக்கர் காலம்

195


இவர், பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். 'வடநூற்றுறையுந் தென்திசைத் தமிழும் விதிமுறை பயின்ற நெறியறி புலவன்' என்று இவர் குறிக்கப்படுகின்றமை, இவர்தம் இருமொழிப் புலமையை உணர்த்தும். திருக்குறளுக்குப் பதின்மர் செய்த உரையில் இவருடைய உரையே தலை சிறந்து விளங்குகின்றது. இதனை,

'நூலிற் பரித்தவுரை யெல்லாம் பரிமே லழகன்

தெரித்தவுரை யாமோ தெளி'

என்ற தொண்டைமண்டல சதகச் செய்யுளால் அறியலாம். இவர் உரை தருக்க முறையில் (logical) சிறந்து விளங்குகிறது. பழைய செய்யுள்களையும் உரைநடையில் எடுத்துத் தருகின்ற பெருமை இவரையே சாரும். சிற்சில இடங்களில் வடநூலார் கருத்தையொட்டித் தமிழர் மரபிற்கு மாறான முறையில் உரை வகுக்கிறார். ஆயினும், இவருடைய உரையே சிறந்து விளங்குகிறது. சங்க நூலாம் பரிபாடலுக்கு ஓர் அரிய உரையினை இவர் வகுத்துள்ளார்.

புறநானூறு, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு ஆகிய சங்க நூல்களுக்கும், சில பாடல்களுக்கும் பழைய உரை ஒன்றுள்ளது; இயற்றியவர் இன்னார் என்பது புலப்படவில்லை. பிற்காலத்தில் நன்னூலுக்குச் சிவஞான முனிவரும், மயிலை நாதரும், சங்கர நமச்சிவாயப் புலவரும் உரை கண்டனர்.

பல துறை நூல்கள்

வடமொழியில் அமைந்துள்ள புராணங்களில் சிலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தார்கள் நம் நாட்டுப் புலவர்கள். இக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் தலபுராணங்கள் எழுதத் தலைப்பட்டார்கள். கோயில்களைப் பற்றியும்