பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தமிழ் இலக்கிய வரலாறு

களுக்கும் சென்று பரவிக் குடியேறினர். எனவே தென்னிந்தியாவிலேயே அவர்கள் முதன் முதலில் தங்கி வாழ்ந்திருக்க வேண்டும் என்பது தெரியவருகின்றது.[1]

தமிழினம்

‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி’ என்று தமிழினத்தின் பழமையினைப் பாராட்டிப் பேசுகிறார் பைந்தமிழ்ப்புலவர் ஒருவர். உலகின் பிற பகுதி மக்கள் நிலையான வாழ்வின்றி அமைதியற்று வாழ்ந்த காலத்திலேயே தமிழர்கள் நல்ல அரசியல் அமைப்பினையும், சமுதாய ஒருமைப்பாட்டினையும், வாணிகச் சிறப்பினையும், இலக்கியச் செல்வத்தினையும் பெற்று வாழ்ந்து வந்தார்கள். கடல், ஆர்கலி, முந்நீர்,பரவை, புணரி முதலிய கடலையுணர்த்தும் தூய தமிழ்ச்சொற்களும், நாவாய், ஓடம், மரக்கலம், தோணி, தெப்பம், மிதவை, கலம், கப்பல், கட்டுமரம், திமில், அம்பி முதலிய மரக்கலத்தின் வேறு பெயர்களும், தமிழர் கடல் வாணிகத்தில் சிறப்புற்றிருந்தனர் என்பதற்குச் சான்று பகரவல்லன.

வாணிகத் தொடர்பு

கி. மு. பத்தாம் நூற்றாண்டிலேயே தமிழ்நாடு, சிரியா, பாபிலோனியா, எகிப்து முதலிய நாடுகளோடு வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. தமிழ் நாட்டின் மணம் பரப்பும் சந்தனம், ஆங்கிலத்தில் சந்தல் (Sandal) ஆனது. மயிலை ஆகுபெயரால் உணர்த்தும் ‘தோகை’ என்ற சொல் ‘துக்கி’ (tukki) என்று ஹீப்ரு மொழியில் வழங்குகிறது.


  1. Rev H. Heras- Studies in Prota - Indo - Meditteranean Culture, p. 21.