பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

தமிழ் இலக்கிய வரலாறு


கதைகளும் உரைநடை நூல்களாம் என்பது பெறப்படுகின்றது.[1]

சிலப்பதிகாரத்தில் செய்யுள்களுக்கு இடையில் சில இடங்களில் உரைநடை விரவி வருவதனைக் காணலாம். இறையனார் அகப்பொருள் உரையில் சிறிது கடினமான நடையில் அமைந்த உரைநடை காணப்படுகிறது. இடைக்காலத்தில் வடமொழி கலந்த தமிழ் உரைநடையினைச் சமண ஆசிரியர் சிலர் 'மணிப்பிரவாளம்' என்னும் நடையில் எழுதினர் என்று ஸ்ரீ புராணம், கத்திய சிந்தாமணி முதலிய நூல்களால் அறியலாம். பதினான்காம் நூற்றாண்டில் தொல்காப்பியம், சங்க நூல்கள், சங்கம் மருவிய கால நூல்கள் முதலியவற்றிற்கு உரையெழுதிய இளம்பூரணர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார், பேராசிரியர். சேனாவரையர், பரிமேலழகர் முதலியோர் திட்பமான, செறிந்த உரைநடையினை எழுதியுள்ளனர். வைணவ உரையாசிரியர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்திற்கு மணிப்பிரவாள நடையில் உரை செய்தனர். சைவ சித்தாந்த சாத்திரங்களுக்கும் சைவ சமயப் புலவர் உரை கண்டுள்ளனர். அந்தக் காலத்திலும் செய்யுள் அமைப்பே உரைநடையினும் இலக்கியத்தில் பெரிதும் பயிலப்பட்டது எனலாம். 'இலக்கியம், இலக்கணம், சோதிடம், மருத்துவம், நிகண்டு முதலிய அனைத்து நூல்களும் செய்யுள் நூல்களாகவே துலங்கின. அக்காலத்தில் பனையேடுகளில் இரும்பெழுத்தாணிகொண்டு எழுதினர். இது, இக்காலத்தில் தாளில் பேனாவால் எழுதுவது போன்ற எளிய செயலன்று. 'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்' என்ற முறையால்தான் அந்த இடர்ப்பாடு களையப்பட முடிந்தது. ஒரு கருத்தை உரைநடையில் சொல்வதைவிடச் செய்யுளில் சொல்வதால் காலச் சுருக்கத்தையும் முயற்சி எளிமையையும் பெற இயலும். அச்சுப் புத்தகங்கள் இல்லாத காலமாதலால் நூல்களைப் பயில்வதற்கும், பயிற்றுவதற்கும்


  1. திரு பூ. ஆலாலசுந்தரம் செட்டியார்; மறுமலர்ச்சி உரைநடை மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன் விழா மலர், ப. 373.