பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

தமிழ் இலக்கிய வரலாறு


தம் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். 'புதியதும் பழையதும்,' 'கண்டதும் கேட்டதும்', 'நினைவு மஞ்சரி' முதலியன இவர் இயற்றிய உரைநடை நூல்களாகும். நூல்களைப் பதிப்பிக்கும் முறையில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் விளங்கிய இவர், 86 வயது வரை வாழ்ந்தார்.

'குடந்தை நகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவர் வாயின்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்,

இறப்பின்றித் துலங்கு வாயே!'

என்று பாரதியார் இவரைப் பாராட்டியுள்ளார்.

பழந்தமிழ் நூல்களாம் பத்துப்பாட்டு, திருக்குறள் முதலியவற்றிற்கும் இடைக்காலத்து நூல்களாம் கம்பராமாயணம், வில்லிபாரதம், தண்டியலங்காரம் முதலானவற்றிற்கும் அருமையான உரையினை நயம்பட எழுதியவரான திரு. வை. மு. கோபாலகிருஷ்ணமாசாரியார் தமிழ்ப் பேரகராதிக் குழுவில் (Tamil Lexicon Committee) இருபது ஆண்டுகள் இடையறாது பணியாற்றினார். 'உரையாசிரியச் சக்கரவர்த்தி' என்று இவர் போற்றப்படுகிறார். இராஜாஜியும் "நம்முடைய தென்னாட்டில் இந்தக் காலத்தில் தோன்றிய வியாசாவதாரங்கள் உண்டு; அவர்களில் ஸ்ரீ. வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் ஒருவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.[1] கி. பி. 1956 ஆம் ஆண்டு இவர் மறைந்தார்.

‘அபிதான சிந்தாமணி’ என்ற தமிழ்ப் பேரகராதியினை இயற்றியவர் திரு. ஆ. சிங்காரவேலு முதலியார். பட்டினத்தடிகள் பாடல்களுக்கு ஓர் உரையும் இவர் கண்டுள்ளார். தமிழ், பட்டப் படிப்புக்கென்ற தகுதிக்குப்


  1. ஸ்ரீ. உ. வே. வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரிய சரிதை, ப, 5.