பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலம்

31

முப்பிரிவுகள்

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் அதிகாரமும் ஒன்பது இயல்கள் கொண்டது. எழுத்ததிகாரம் எழுத்துகளைப் பற்றிய இலக்கணங்களை எடுத்தியம்புகிறது; சொல்லதிகாரம் எழுத்துகளால் ஆகிய சொற்களைப் பற்றிச் சொல்கிறது; பொருளதிகாரம், அச் சொற்களில் அமைந்துள்ள பொருள்களைப் பொருத்தமுறக் கூறுகின்றது.

எழுத்தும் சொல்லும் தமிழ்மொழியின் அமைதியை விளக்கி நிற்பன. பொருள், அம் மொழி பேசும் தமிழரின் உயர்ந்த ஒழுக்கத்தைச் சிறப்பித்துக் காட்டுவதாகும். உலகத்தின் எல்லா மொழிகளிலும் எழுத்துக்கும் சொல்லுக்குமே இலக்கணம் அமைந்திருக்க, தமிழ்மொழியிலோ பொருளுக்கும் இலக்கணம் அமைந்துள்ளது தமிழுக்கே தனிச் சிறப்பாய் அமைந்த ஒன்றாகும்.

அகம், புறம்.

பழந்தமிழ் இலக்கியத்தினை அகம், புறம் என இரு பிரிவுகளாகப் பகுத்தனர். ஒத்த தலைமகனும் தலைமகளும் உள்ளம் ஒன்றுகூடி வாழும் வாழ்க்கையைக் கூறும் பாடல்கள் அகமெனப்பட்டன. போர், கொடை, வென்றிச் சிறப்பு முதலியவற்றைக் கூறும் பகுதிகள் புறமெனப்பட்டன. அகவாழ்வு வீட்டு இன்பத்திற்கும், புறவாழ்வு நாட்டுச் சிறப்புக்கும் உரமூட்டின. காதல் பற்றிப் பாடப்படுகின்ற பாடல்களிலே நுண்மையான ஒரு வரையறை-கட்டுப்பாடு கையாளப்பட்டது. காதல் பாட்டுகளில் காதலர் பெயரைக் கூறும் வழக்கம் இல்லை இதனை,

'மக்கள் நுதலிய அகனைந் திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்'

என்று தொல்காப்பியம் கூறுகிறது. எனவே காதலைப் பற்றிப் பிறந்த கவிதைகள் எல்லாம் சமுதாயம் முழுவதற்குமே பொதுவாய் எழுந்தன. அகப்பாடல்கள்