பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

380

தமிழ் இலக்கிய வரலாறு


யும் செய்து, இப் புதிய வழியைக் கண்டு பிடிக்கும்படி அனுப்பினார். வாஸ்கோ-டா-காமா போர்ச்சுக்கல் நாட்டின் துறைமுகமான லிஸ்பன் நகரத்திலிருந்து கி. பி. 1497 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 9 ஆம் நாள் புறப்பட்டார். பல துன்பங்களையும் சோதனைகளையும் கடந்து 1498 ஆம் ஆண்டு மேத்திங்கள் 22 ஆம் நாள், மலையாளக்கரையிலுள்ள கள்ளிக்கோட்டையை அடைந்தார். யவனருக்குப்பின் வாணிபத்தின் பொருட்டு நம் நாட்டையடைந்த முதல் ஐரோப்பியர் இவரே. இவரைத் தொடர்ந்து போர்ச்சுகீசியர் அடிக்கடி வந்து தமிழகத்தை நிறைத்தனர். இவர்கள் கள்ளிக்கோட்டை, கோவா, கொச்சி முதலிய நகரங்களில் தங்கி வாணிகம் செய்தனர். வாணிகம் செய்வதோடு நில்லாமல் சமயப் பிரச்சாரம் செய்ய இவர்கள் கிறித்துவ மதப் பாதிரிமார்களையும் இங்கு அழைத்து வந்தனர். அப்போதே இந்தியர்களைக் கிறித்தவராக்கும் மதமாற்றமும் தொடங்கிவிட்டது.

போர்ச்சுக்கீசியர் இந்திய வாணிகத்தால் பொருள் சேர்ப்பது கண்டு, ஹாலண்டு நாட்டினரான டச்சுக்காரர்களும் பெரும் முயற்சி செய்து இந்தியாவுக்கு வந்து வாணிகம் செய்தனர். டச்சுக்காரர்கள் கி. பி. 1502 ஆம் ஆண்டில் 'கிழக்கிந்திய வாணிகக் கழகம்' ஒன்று ஏற்படுத்தினர். இந்தியா, இலங்கை ஆகிய இடங்களில் தம் வாணிக நிலையங்களை நிறுவி, மெல்ல மெல்லப் போர்ச்சுக்கீசியரின் இடங்களைக் கைப்பற்றிக் கொண்டனர்.

மூன்றாவதாக இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர் பின்னே இந்தியத் துணைக்கண்டத்தையே அடிமைப்படுத்தியாண்ட ஆங்கிலேயர் ஆவர். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக இந்தியா செல்லும்வழி காண ஆங்கிலேயர் முயன்றனர். சர் பிரான்ஸிஸ் டிரேக் என்பார் 1578 ஆம் ஆண்டு போர்ச்சுக்கீசியக் கப்பல் ஒன்றைக் கொள்ளையடித்தார். அதில் கிடைத்த வரைபடம் ஒன்று, ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக் கொண்டு, இந்தியாவுக்குச் செல்லும் வழியைத் தெரிவித்தது. அதனால் ஆங்கிலேயர்