பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பிற்சேர்க்கை

387


பால்கு ஐயரின் இடைவிடா முயற்சியால் ஏராளமான தமிழ் நூல்கள் அங்கே அச்சிடப்பட்டன. நூல்கள் அச்சிடுவதற்குப் போதுமான காகிதம் ஐரோப்பாவிலிருந்து வருவதற்குக் காலதாமதம் அடிக்கடி ஏற்பட்டதால், தரங்கம்பாடிக்கு அருகே, அவர் ஒரு காகித உற்பத்திச் சாலையும் தொடங்கினார். அது நீண்ட நாள் நிலைத்து நிற்கவில்லை. என்றாலும் இந்தியாவில் முதன்முதலில் காகிதத் தொழிற்சாலை நிறுவியவர் தரங்கம்பாடி ஏசு சபையினர் என்னும் பெருமையைப் பெற்றுத் தந்தது.

ஆங்கிலேயர் 1761 ஆம் ஆண்டு புதுச்சேரியைக் கைப் பற்றினர். அங்கிருந்த அச்சு இயந்திரத்தைத் கைப்பற்றி அதைச் சென்னைக்கு அனுப்பினர். அது சென்னை வேப்பேரி யில் நிறுவப்பட்டது. அங்கே அரசுக்குத் தேவையான நூல் கள் பல அச்சிடப்பட்டன.

கி. பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் அச்சுக்கூடங்கள் பல தோன்றின. 1833 ஆம் ஆண்டில், இந்தியர் அச்சுக்கூடம் வைக்கக்கூடாது என்றிருந்த தடைச்சட்டம் நீங்கியது. அதனால் தமிழர்களும் அச்சு இயந்திரங்கள் வரவழைத்து அச்சுக் கூடங்கள் நிறுவினர். கிறித்தவ நூல்கள் அல்லாமல் பல நல்ல தமிழ் நூல்கள் அச்சாயின. பழந்தமிழ் இலக்கியங்கள் அச்சுப் புத்தக வடிவம் பெற்றன. மக்களிடையே அவை எளிதில் பரவின.

தமிழர் கல்வி அறிவு பெறவும், தமிழ் மொழி வளமுறவும் புதிய இலக்கியத் துறைகள் தோன்றவும் ஐரோப்பியர் அறிமுகப்படுத்திய அச்சு இயந்திரம் பேரளவு துணை செய்தது என்பதைத் தமிழர்கள் நன்றியுடன் நினைத்து இன்றும் போற்றுகின்றனர்.