பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

தமிழ் இலக்கிய வரலாறு


யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே."
'வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்'

என்ற அடிகள், ஆண், பெண் இருபாலர் வாழ்வினையும் குறிக்கின்றன.

'இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியர் என் கணவனை

யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே

என்று கூறும் உயர்ந்த தலைவியையும் அங்கு நாம் காண்கின்றோம். பல்வேறு பாடல்களிலே நீதிகள் பொதிந்து கிடக்கும் மாண்பினைக் காண்கிறோம். உவமையும் இறைச்சியும் பல பாடல்களில் காணக்கிடக்கின்றன. இதுவே முதன் முதல் தொகுக்கப்பட்ட தொகை நூல் என்று கூறும் பலருடைய கருத்தை அரண் செய்வதற்கு ஏற்ற சான்றுகளும் இந்நூலில் உள.

ஐங்குறுநூறு

இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் சிவபெருமானைப் பற்றியது. இதனைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இந் நூற்பாக்கள் மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் உடையன. மற்றத் தொகை நூல்களின் பாக்களைக் காட்டிலும் அடிவரையிற் குறைந்த நூறு நூறு பாக்களால் இது ஐந்திணை ஒழுக்கங்களைச் செப்பமுறத் தனித்தனியே சிறப்பிக்கின்றமையின், ஐங்குறு நூறு என்ற பெயர் பெற்றது. அகவற் பாக்களால் ஆனது; குறுகிய அடி உடைய பாட்டுகளில் சொற்சுவை பொருட்சுவை சிறந்து, இயற்கையின் இனிமையும் தமிழ் அருமையும் புலப்பட விளங்குவதைக் காணலாம்; ஆதன் அவினி போன்ற மலைநாட்டு வேந்தர் வரலாற்றை