பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

தமிழ் இலக்கிய வரலாறு


பெரும்பாணரை ஆற்றுப்படுத்தியமையால் பெரும் பாணாற்றுப்படை என்றும் வழங்கப்பெறுகின்றன. மற்றும் பெரும்பாணாற்றுப் படையோடு ஒத்த சிறிய அளவினை உடையதால் இதனைச் சிறுபாணாற்றுப்படை என்பர். சிறுபாணாற்றுப்படையின் 35வது அடியில் 'இன்குரற் சீறியாழிடவயிற் றழீஇ' என்றும், பெரும்பாணாற்றுப்படையின் 462 ஆம் அடியில், 'இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி' என்றும் வருகின்ற தொடர்களால், யாழால் வந்த வேறுபாடே இவ்விரு பாணர்க்கும் இடையில் அமைந்தது எனலாம்.

இந் நூலில் வளமாக ஓடிப் பின் வற்றிய ஒரு காட்டாறு காட்டப்பட்டுள்ளது. ஊற்றற்ற கானாற்றை அடுத்து வெயிலின் கொடுமை கூறப்படுகிறது. அவ்வழியில் பாணர்கள் வரிசையறிந்து பரிசைத் தரும் வள்ளல்களை நாடிச் செல்கிறார்கள். அக்கூட்டத்தில் ஒரு விறலியும் உள்ளாள். அவர்கள் இலைகள் தீய்ந்த மரத்தடியில் தங்குகின்றார்கள். பாலைப் பண்ணை எழுப்புகிறான் பாணன்.

வறுமையின் எல்லையை ஒரு நாயின் குடும்பம் வாயிலாக ஆசிரியர் பின்வரும் அடிகளால் உணரவைக்கிறார்.

"திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது
புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்

காழ்சோர் முதுசுவர்க் கணச்சிதல் அரித்த........
- சிறுபாண் : 130-133

இதனைச் 'சிறப்புடைத் தான சிறுபாணாற்றுப்படை' எனப் புகழ்கிறார் தக்கயாகப் பரணி உரையாசிரியர்.