பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தமிழ் இலக்கிய வரலாறு


'புலம்பொடு வதியும் நலம்கிளர் அரிவைக்கு
இன்னா அரும்படர் தீர விறல் தந்து
இன்னே முடிகதில் அம்மா .............'

'நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்

பலரொடு முரணிய பாசறைத் தொழிலே!'

என்ற அடிகளில் திறம்பட விளக்குகிறார். இப் பாட்டில் யவனர் இயற்றிய பாவை விளக்கும், உடல்வலி மிக்க மிலேச்சர் நகரினைக் காவல் காப்பதும் கூறப்படுகின்றன.

குறிஞ்சிப்பாட்டு

குறிஞ்சித் திணையைப் பாட வல்ல கபிலர், ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழ்ச் சுவையினையும், தமிழின் அகப்பொருள் மரபினையும் உணர்த்துவான் வேண்டி, 261 அடிகள் கொண்ட இந்நூலை இயற்றினார். நச்சினார்க்கினியர் இதனைப் “பெருங்குறிஞ்சி" என்று பாராட்டுகின்றார்; அகவற்பாவால் அமையப்பட்ட இந்நூல், தோழி செவிலிக்குத் தலைவியின் பொருட்டு அறத்தொடு நிற்பதாக அழகுறக் கூறிச் செல்கிறது.

வரையாது வந்து ஒழுகிய தலைமகன் வரவு, ஒருநாள் தடைப்பட்டது. அது தலைவியின் மேனியினை வாடச் செய்து வனப்பினை அழித்தது. இது கண்ட செவிலி துன்புற்றாள்; இருவர்க்கும் இடையில் தோழி அறத்தொடு நின்றாள். திறமையாகச் சொல்லாடி, சொல்லவந்த கருத்தைப் புலப்படுத்தினாள். இதுவே குறிஞ்சிப்பாட்டு ஆகும்.

தலைவி ஆயத்துடன் புனலாடியதும் பூக்கொய்ததும் நெஞ்சையள்ளும் ஓவியமாகத் தீட்டப்பெற்றுள்ளன. செங்காந்தட்பூ முதல், மலைஎருக்கம்பூ ஈறாக 99 பூக்களும் வண்ணமும் வனப்பும் புலப்பட வருணிக்கப்பட்டுள்ளன.