பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

தமிழ் இலக்கிய வரலாறு


வாழ்வு சிறப்புறச் சித்திரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சுறாக்கொம்பை மணலில் நட்டு வழிபடும் தெய்வ வழிபாடும் கூறப்படுகிறது. துறைமுகத்திலே இறக்குமதியாகும் பொருள்களுக்குச் சுங்கம் வசூலிக்கப்பட்டது. ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்களில் (அடிகள் 185-193) சோழரது புலிச்சின்னம் பொறிக்கப்பட்டது. வணிகர்கள்,

'தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங்

குறைகொடாது'

வாணிகம் செய்கின்றனர்.

'சோறுவாக்கிய கொழுங்கஞ்சி

யாறுபோலப் பரந்தொழுகி'

என்று நாட்டு வளப்பம் நயம்பட வருணிக்கப்படுகிறது.

மலைபடுகடாம்

இப்பாட்டு, ஆற்றுப்படைகளிலே அடியளவில் பெரியபாட்டாய், 583 அடிகளுடைய ஆசிரிப்பாவான் அமைந்து காணப்படுகிறது. இதற்குக் 'கூத்தராற்றுப் படை' என்ற பெயரும் உண்டு. பரிசில் பெற்ற கூத்தன் ஒருவன், எதிர்ப்பட்ட இரவலனாம் மற்றொரு கூத்தனைப் 'பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னனிடத்து ஆற்றுப்படுத்தியதாக இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது. மலைக்கு யானையை உவமித்து. அதன்கண் பிறந்த ஓசையைக் 'கடாம்' எனச் சிறப்பித்ததனால், 'மலைபடு கடாம்' எனப் பெயர் பெற்றது.

'அலகைத் தவிர்த்த வெண்ணருந் திறத்த

மலைபடு கடாம் மாதிரத் தியம்ப'
- 347-48

என்னும் அடிகள் பாட்டின் பெயர்க் காரணத்தைப் புலப்படுத்துகின்றன.