பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

என்பது. பெற்றோரை இழந்த இவரைத் தாழ்ந்த குலத்தவர் ஒருவர் வளர்த்து வந்தார். இவ் ஆழ்வாரின் வேண்டு கோள்படி காஞ்சிபுரத்தில் திருமால் தம் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு சென்றார் என்றும், பின்னர் அவர் விரும்பியவாறே மீண்டும் திரும்பி அதனை விரித்துக் கொண்டார் என்றும் கூறுவர். இதனால் திருமாலும் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்' எனப் பெயர் பெற்றார்.

இவர் பாடியவை திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி என்பன. இவரது காலம் கி பி. ஏழாம் நூற்றாண்டு.

5. பெரியாழ்வார்

இவர் திருவில்லிபுத்தூரில், வேயர் குலத்தில் பிறந்தவர்; வீட்டுசித்தர் என்னும் இயற்பெயருடையவர் ; நாள் தோறும் பெருமாளுக்குப் பூமாலை சார்த்தும் திருத்தொண்டு புரிந்து வந்தார். இவர் இறைவனுக்கே திருப்பல்லாண்டு பாடியதால் பெரியாழ்வார் என்றழைக்கப் பெற்றார். இவர் பாடிய திருப்பல்லாண்டு நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் தொடக்கத்தில் அமைந்துள்ளது. இவர் கண்ணனைக் குழந்தையாகக் கொண்டு, தம்மையே தாயாகப் பாவித்துத் தாலாட்டுப் பாடியுள்ளார். அதுவே பிள்ளைத் தமிழ் என்னும் இலக்கிய வகை தோன்றக் காரணமாயிற்று. இவர் பாடிய மற்றொரு நூல் பெரியாழ்வார் திருமொழியாரும். ஆண்டாளை வளர்த்தவர் இவரே.

“மாணிக்கம் கட்டி வயிர மிடைகட்டி
ஆணிப்பொன் னாற்செய்தவண்ணச் சிறுதொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தாள்
மாணிக் குறளனே தாலேலோ
வையம் அளந்தவனே தாலேலோ”